தமிழ் சினிமா

ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி ‘அறம் 2’: இயக்குநர் கோபி நயினார் திட்டம்

செய்திப்பிரிவு

ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி ‘அறம் 2’ படத்தை உருவாக்க இயக்குநர் கோபி நயினார் திட்டமிட்டு இருக்கிறார்.

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான படம் 'அறம்'. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது.

அப்படத்துக்கு வரவேற்பு கிடைத்தவுடனேயே ‘அறம் 2’ உருவாகும் என்று தயாரிப்பாளர் ராஜேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ஆனால், எப்போது, யார் இயக்குநர் உள்ளிட்ட எந்தவொரு விவரமுமே வெளியாகாமல் இருந்தது.

’அறம் 2’ குறித்து விசாரித்த போது, “இயக்குநர் கோபி நயினாரே இயக்கவுள்ளார். நயன்தாரா நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். அரசியலுக்கு நயன்தாரா வருவது போல் முதல் பாகத்தை முடித்திருப்பார்கள். இரண்டாம் பாகத்தில் நிறைய அரசியல் கட்சிகள் இருந்தாலும், ஜனநாயகம் என்பதே இல்லை. அதன் முக்கியத்துவத்தை மையப்படுத்தி ‘அறம் 2’ இருக்கும்” என்று படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள்.

2019-ம் ஆண்டு நயன்தாரா ஆண்டாக இருக்கும் என்று தெரிகிறது. அவரது நடிப்பில் ‘சிவகார்த்திகேயன் - ராஜேஷ்’ படம், ‘சைரா’, ‘ஐரா’, ‘விஸ்வாசம்’ மற்றும் ‘அறம் 2’ ஆகியவை வெளியாகும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT