தமிழ் சினிமா

தமிழிசையின் கருத்துக்கு காயத்ரி ரகுராம் பதிலடி

செய்திப்பிரிவு

காயத்ரி ரகுராம் பாஜகவிலேயே இல்லை என அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளதற்கு காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார் காயத்ரி ரகுராம்.

இது தொடர்பாக அவர் ட்விட்டரில், "அன்புள்ள தமிழிசை மேடம். நான் பாஜகவின் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது ஒரு கணினி வாயிலாக. நீங்களாகவே யாரையும் கட்சியில் சேர்க்கவோ விலக்கவோ இயலாது. இது ஒரு தேசியக் கட்சி. இரண்டாவதாக தமிழக பாஜக யுவ மோர்சாவின் செயல்வீரர்களும் தலைவர்களும் பெண்களுக்கு எதிரானவர்கள். அவர்கள் பெண்களை மிரட்டுகின்றனர். அவர்களை யாரும் கேள்வியே கேட்கக்கூடாதா என்ன?

நான் இங்கிருப்பது நரேந்திர மோடிக்காகவே தவிர உள்ளூர் முகங்களுக்காக அல்ல. உங்கள் கட்சியிலிருந்து உறுப்பினர்களை விரட்டுவதை விட்டுவிட்டு ஆள் சேர்க்கப் பாருங்கள். உங்களுக்கு யாரை சேர்க்க வேண்டும் நீக்க வேண்டும் என்று சொல்லும் அதிகாரம் இல்லை. நீங்கள் தமிழக பாஜகவின் தலைவர் மட்டும்தான். நீங்களே எல்லா எதிர்காலத்தையும் நிர்ணயித்துவிட முடியாது.

தமிழக பாஜகவில் இருந்து கொண்டு பிரச்சினைகளை சந்திப்பதைவிட அதிலிருந்து நான் விலகியே இருக்கிறேன்.

அன்று காவலர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சையில் நான் உண்மையை விளக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், யாரும் கேட்கத் தயாராக இல்லை. அன்று நான் தான் காரை ஓட்டிச் சென்றேன். காவலர் ஒருவர் என்னை இறக்கிவிட்டார் என்று சொல்வது பொய். நான் தேவைப்பட்டால் ரத்த பரிசோதனைக்குக்கூட தயார் என்றே கூறியிருந்தேன்" என்று பதிவிட்டிருக்கிறார். 

முன்னதாக நேற்று, தமிழக பாஜகவில் உட்கட்சி அரசியல் நிலவுகிறது என்று காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

பாரதிய ஜனதாவின் இளைஞர் அணி பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்சாவில் செயற்குழுவில் உறுப்பினராக இருக்கும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக பாஜகவில் உட்கட்சி அரசியல் நிலவுகிறது. எனது புகழைப் பார்த்து அவர்கள் அச்சத்துடனும் கலக்கத்துடனும் உள்ளனர். இந்தப் பருந்துகளால் நான் பந்தாடப்படுகிறேன்.

என் மீது களங்கம் சுமத்தும் வகையில் சிலருக்கு கையூட்டு வழங்கப்பட்டிருக்கிறது. நான் சமீபகாலமாக பாஜகவில் சுறுசுறுப்பாக இயங்கவில்லை. ஆனாலும் சில இளம் மனதுகள் இப்படிப்பட்ட தரம் தாழ்ந்த தந்திரங்களில் ஈடுபடுகின்றன. இளந்தலைவர்களுக்கு வாழ்த்துகள். 

எல்லாம் கர்மா. அவர்கள் என்றாவது வெல்ல வேண்டும் என பிரார்த்திக்கிறேன். ஆனால், இதே மோசமான இதயத்தோடு அல்ல. இப்படிப்பட்ட அரசியல் பற்றி பதிவிடக்கூட எனக்கு விருப்பமில்லை" எனப் பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பான கேள்விக்கு தமிழிசை, "காயத்ரி ரகுராம் பாஜகவிலேயே இல்லை" எனச் சொல்ல அதற்கு இன்றும் கட்சியையும், தமிழிசையையும் சரமாரியாக விமர்சித்து ட்வீட் செய்திருக்கிறார் காய்த்ரி ரகுராம்.

SCROLL FOR NEXT