தமிழ் சினிமா

எதுக்கு சென்சார் போர்டு? - சர்கார் விவகாரம் குறித்து குஷ்பூ ட்வீட்டால் சர்ச்சை

செய்திப்பிரிவு

அரசுக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றுள்ளதால் விஜய் நடித்த ’சர்கார்’ படத்துக்கு தமிழகம் முழுவதும் ஆளும் கட்சி சார்பில் கடும் நெருக்கடி தரப்பட்டு வருகிறது. படத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வசனங்களையும், காட்சிகளையும் நீக்குவதாக, சன் பிக்சர்ஸ் தரப்பு தெரிவித்தது.

தற்போது இது தொடர்பாக மறு தணிக்கைப் பணிகள் முடிவடைந்து, படக்குழுவினரிடம் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘சர்கார்’ விவகாரம் தொடர்பாக குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசை கடுமையாக சாடியிருந்தார்.

இந்நிலையில் ‘சர்கார்’ மறு தணிக்கை முடிவடைந்திருக்கும் நிலையில் குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ''தணிக்கை வாரியத்தைக் கலைத்துவிடலாம். அதற்குப் பதிலாக எந்தப் படம் திரைக்கு வரவேண்டும்.. எந்த மாதிரியான காட்சிகள் இடம்பெற வேண்டும். எந்தெந்த காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்பதை அரசியல் கட்சிகள், சாதி அமைப்புகள், கலாச்சாரக் காவலர்களே முடிவு செய்யட்டும்.

'சர்கார்' நிச்சயமாக முடிவுரையாக இருக்கப் போவதில்லை. சர்காரில் சில வசனங்கள் மியூட் செய்யப்பட்டிருப்பதாலும் சில காட்சிகள் நீக்கப்பட்டிருப்பதாலும் மட்டுமே எல்லாம் முடிந்துவிடப் போவதில்லை. 'சர்கார்' அதிமுக கோமாளிகளுக்கு அவர்களது குண்டர் கலாச்சாரத்தை அரங்கேற்ற றெக்கைகளை வழங்கியிருக்கிறது. இப்படித்தான், படிப்பறிவே இல்லாத கூட்டம் நம் மாநிலத்தை ஆள்கிறது என்பதை உலகிற்கு நாம் காட்டியிருக்கிறோம்'' என்று குஷ்பூ தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT