ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. நவம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.
'2.0' படத்தின் ஒலிக்கலவை செய்திருப்பவர் ரசூல் பூக்குட்டி. இப்படத்துக்காக உலகத்தில் முதன் முறையாக 4டி தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளார். ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரசூல் பூக்குட்டி பேசியதாவது:
இது ஒரு தமிழ்ப்படம் இல்லை இது இந்தியப் படம். சிறந்த தொழில்நுட்பம், பிரம்மாண்டம் இவற்றுக்கு எல்லாம் நாம் எப்போதுமே மேற்கு உலகையே பார்த்திருந்தோம். ஆனால் ஷங்கர் உலகத்தையே, இந்திய சினிமாவைப் பார்க்க வைத்திருக்கிறார்.
லைகாவின் ஆதரவு அதற்கு உதவியது. இதில் நான் ஒரு பாலம் மட்டுமே. எங்கள் உழைப்பில் உருவான இந்த 4டி சவுண்ட் தொழில்நுட்பத்தை நாங்கள் SRL (Shankar, Resul, Lyca) 4டி சவுண்ட் எனப் பெயரிட்டிருக்கிறோம்
இவ்வாறு ரசூல் பூக்குட்டி பேசினார்