‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு தளத்தில் அஜித் நடந்து கொண்ட விதம் தொடர்பாக, குரூப் டான்ஸர்கள் மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறார்கள்.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘விஸ்வாசம்’. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துவரும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்திருக்கிறது படக்குழு. தற்போது இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பாடலுக்கான சில காட்சிகளை மட்டும் படமாக்கி வந்தார்கள்.
அப்போது அஜித்துடன் குரூப் டான்ஸர்கள் நடனமாடும் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று சரவணன் என்ற குரூப் டான்ஸர் தனது உடலில் ஒரு அசாதாரண சூழலை உணர்ந்திருக்கிறார். வாந்தி எடுத்து, மிகவும் உடல் நிலை மோசமாகியிருக்கிறது.
உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தி, மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்கள். ஈசிஜி உள்ளிட்ட அனைத்து டெஸ்ட்களும் எடுக்கும் போதே, அவருடைய உயிர் பிரிந்துவிட்டது. அவருக்கு டெஸ்ட் எடுக்கும் போதே, அஜித்துக்கு தகவல் தெரியவர உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்.
சரவணன் உயிரிழந்தது தெரிந்தவுடன் பிரேதப் பரிசோதனை முடியும் வரை மருத்துவமனையிலே இருந்திருக்கிறார் அஜித். மேலும், குடும்பத்தினரிடமும் பேசி உடலை புனேவிலிருந்து மும்பைக்கு அனுப்பி, அங்கிருந்து சென்னைக்கு கொண்டு செல்லும் வரை முழுக்க தொலைபேசி வாயிலாக எவ்வித பிரச்சினையும் ஏற்படாதவாறு பேசிக் கொண்டே இருந்திருக்கிறார். அருகில் இருந்த டான்ஸர்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறியிருக்கிறார்.
இவ்வளவு பெரிய நடிகர் இந்த அளவுக்கு அக்கறையுடன் இருக்கிறாரே என்று குரூப் டான்ஸர்கள் மிகவும் நெகிழ்ந்து போய் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.