தமிழ் சினிமா

‘கஜா’வின் கோர தாண்டவம்: தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான வீடியோ பாடல்

செய்திப்பிரிவு

‘கஜா’ புயலின் கோர தாண்டவத்தைப் பற்றிய வீடியோ பாடல் ஒன்றை இயக்கியுள்ளார் தங்கர் பச்சான்.

கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 15) நள்ளிரவு வேதாரண்யம் அருகே கரையைக் கடந்த ‘கஜா’ புயலால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட 7 தமிழக மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் புயலால் 45 பேர் மரணமடைந்ததாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏராளமான ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும், தென்னை, வாழை உள்ளிட்ட மரங்களும் லட்சக்கணக்கில் சேதமடைந்துள்ளன. ஓட்டு மற்றும் கூரை வீடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

ஏராளமான தன்னார்வலர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்தப் புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், இன்னும் பல கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில், ‘கஜா’ புயலின் கோர தாண்டவம் பற்றிய வீடியோ பாடல் ஒன்றை இயக்கியுள்ளார் தங்கர் பச்சான். புஷ்பவனம் குப்புசாமி இந்தப் பாடலை எழுதி, இசையமைத்து, பாடியுள்ளார். கஜா புயலினால் சீரழிக்கப்பட்ட அந்தப் பாடலைப் பார்க்கும்போது காண்பவர் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

SCROLL FOR NEXT