தமிழ் சினிமா

ஏ.ஆர்.முருகதாஸ் கைதா? - சன் பிக்சர்ஸ் ட்வீட்டால் பெரும் சர்ச்சை

செய்திப்பிரிவு

ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய போலீஸார் அவரது வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள் என்று சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ட்வீட்டால் பெரும் சர்ச்சை உருவாகியிருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘சர்கார்’. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சை, கதை சர்ச்சை ஆகியவற்றை கடந்து ஒருவழியாக தீபாவளியன்று திரைக்கு வந்தது.

இப்படம் வெளியானவுடன் அதிமுகவினர் சில காட்சிகளுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். மேலும், அக்காட்சிகளை நீக்காவிட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், உதயகுமார் உள்ளிட்ட பலரும் ‘சர்கார்’ எதிர்ப்பு தெரிவித்து பேட்டியளித்தனர்.

இதனைத் தொடர்ந்து ‘சர்கார்’ படம் திரையிடப்படும் திரையரங்குகளில் அதிமுகவினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு, அங்கு வைக்கப்பட்ட பேனர்கள் மற்றும் போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். இதனால் கடும் சர்ச்சை உருவானதைத் தொடர்ந்து, படக்குழுவினர் அக்காட்சிகளை நீக்க ஒப்புக் கொண்டனர். அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது படக்குழு.

இந்நிலையில், நேற்று (நவம்பர் 7) நள்ளிரவில் சன் பிக்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் “முக்கியமான செய்தி: ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய அவரது வீட்டிற்கு போலீஸார் விரைந்துள்ளனர்” என்று தெரிவித்தார்கள். இதனால் சமூகவலைத்தளத்தில் பெரும் சர்ச்சை உருவானது.

அதனைத் தொடர்ந்து சில மணித்துளிகளில், “ஏ.ஆர்.முருகதாஸ் எங்கே என்று விசாரித்துவிட்டு, போலீஸார் அவரது வீட்டிலிருந்து கிளம்பிவிட்டனர். ஏனென்றால் அவர் வீட்டில் இல்லை” என்று மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்வீட்டில் தெரிவித்தது.

பலரும் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து வந்த நிலையில், காவல்துறை தரப்பிலிருந்து “’சர்கார்’ படத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது” என்று தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து பலரும் சன் பிக்சர்ஸ் ட்வீட்டைக் குறிப்பிட்டு கடுமையாக சாடினார்கள்.

SCROLL FOR NEXT