நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வரும் ரியோ, தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்.
'சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்கள் தயாரிக்கத் தொடங்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன். முதல் படமாக அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கனா' படத்தை தயாரித்திருக்கிறார். இப்படம் டிசம்பர் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.
தற்போது 2-வது படத்தின் தயாரிப்பைத் தொடங்கியுள்ளார் சிவகார்த்திகேயன். இதில், விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக முன்னணியில் இருக்கும் ரியோ, நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தை 'ஸ்மைல் சேட்டை' யூ-டியூப் சேனல் புகழ் கார்த்திக் இயக்கவுள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகும் முதல் படம் இது. இதன் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று (நவம்பர் 29) சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
நாயகியாக ஷெரின், நாஞ்சில் சம்பத், ராதாரவி, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக யு.கே.செந்தில்குமார், எடிட்டராக ஒலிஃபர் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து தான் படிப்படியாக முன்னேறி தற்போது முன்னணி நாயகனாக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். அதைப் போலவே, இப்போது மற்றொரு நிகழ்ச்சி தொகுப்பாளரையும் நாயகனாக்கி அழகுப் பார்த்திருக்கிறார்.