ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்; அது ரஜினி தான் என்று '2.0' படத்துக்கான வாழ்த்தில் சூர்யா புகழாரம் சூட்டியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் '2.0'. இந்திய திரையுலகில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. கிராபிக்ஸ் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று, தற்போது தான் வெளியாகியுள்ளது. '2.0' வெளியீடு தொடர்பாக, படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் திரையுலகினர் தெரிவித்து வருகிறார்கள்.
'2.0' படத்துக்கான வாழ்த்தில் சூர்யா கூறியிருப்பதாவது:
''மிகப்பெரிய பொழுதுபோக்கை மக்களுக்குத் தரவேண்டும் என்கிற ரஜினியின் தீர்மானம் அனைத்துவிதமான எல்லைகளையும் கடந்துவிட்டது. அதை அவ்வளவு எளிதுபோல ரஜினி காட்டுகிறார். ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான். எனக்கு அது ரஜினி தான். நான் எப்போதும் ஷங்கரின் பார்வையைக் கண்டு பிரம்மித்திருக்கிறேன். சினிமாவின் சக்தியை நம்பவைத்து விடுவார்.
இசையை நாம் கேட்கும் விதத்தையே ஏ.ஆர்.ரஹ்மான் மாற்றியமைத்துள்ளார். கண்டிப்பா '2.0' நமது காதுகளுக்கு விருந்தாக இருக்கும். லைகா நிறுவனம் இந்தப் படத்துக்காக செய்துள்ள இமாலய முயற்சிகளை நம்பவே முடியவில்லை. கண்டிப்பாக தமிழ் சினிமாவை சர்வதேச தரத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள்.
அக்ஷய் குமாருக்கு மிகப்பெரிய வரவேற்பு. தமிழில் அவரைப் பார்ப்பது கண்டிப்பா நன்றாக இருக்கும். மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என '2.0' குழுவை வாழ்த்துகிறேன். கண்டிப்பாக '2.0' உங்களை மகிழ்விக்கும், ஆச்சரியப்படுத்தும், திரையரங்குகளில், 3டியில்''.
இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.