'2.0' படத்தில் தனது கதாபாத்திரத்துக்கான உழைப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார் அக்ஷய்குமார்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் '2.0'. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இந்தியளவில் பெரிய முதலீட்டில் உருவாகியுள்ள படம் '2.0' என்பது குறிப்பிடத்தக்கது.
பல மாதங்களாக நடைபெற்ற கிராபிக்ஸ் பணிகள் ஒருவழியாக முடிவடைந்து, நவம்பர் 29-ம் தேதி வெளியீடு என்று அறிவித்திருக்கிறது படக்குழு. சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்ட இப்படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர் தணிக்கை அதிகாரிகள். அதிகமான சண்டைக்காட்சிகள் இருப்பதால் தான் 'யு/ஏ' என்று தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அக்ஷய்குமார். இவரது பறவை வடிவிலான வித்தியாசமான கெட்டப், பேச்சு உள்ளிட்டவை பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. '2.0' படத்துக்குப் போட்ட மேக்கப்பைப் போல, தன் திரையுலக வாழ்வில் வேறு எந்தவொரு படத்துக்கும் போட்டதில்லை என்று தெரிவித்திருக்கிறார் அக்ஷய்குமார்.
தற்போது '2.0' கதாபாத்திரத்துக்காக அக்ஷய்குமாருக்கு போடப்பட்ட மேக்கப், முதலாவதாக நடைபெற்ற ஃபோட்டோ ஷூட் போன்றவற்றை சின்ன வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அக்ஷய்குமார். இதனை அவரது ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள்.