தமிழ் சினிமா

இளையராஜாவின் 75-வது பிறந்த நாள் விழா: 2 நாட்களுக்கு படப்பிடிப்பு ரத்து

செய்திப்பிரிவு

இளையராஜாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, 2 நாட்களுக்கு படப்பிடிப்புகளை ரத்து செய்யும்படி தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்த நாளை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பிரம்மாண்டமான முறையில் கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறது.

‘இசை ராஜா 75’ என்ற பெயரில், சென்னையில் அடுத்த ஆண்டு (2019) பிப்ரவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் இந்த விழா நடைபெற இருக்கிறது. தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி, பல்வேறு மொழிகளைச் சார்ந்த பிரபலங்களையும் இந்த விழாவில் கலந்துகொள்ள வைக்கத் தயாரிப்பாளர்கள் சங்கம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இந்த விழாவில், இளையராஜாவின் கச்சேரியும் நடைபெற இருக்கிறது. இந்த விழா மூலம் கிடைக்கும் பணம், தயாரிப்பாளர்கள் சங்க நலனுக்காக செலவிடப்பட இருக்கிறது.

இந்நிலையில், பெரும்பாலான நடிகர் - நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த விழாவில் கலந்துகொள்ள இருப்பதால், பிப்ரவரி 2, 3 ஆகிய தேதிகளில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட வேண்டாம் என தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT