ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. நவம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் இயக்குநர் ஷங்கர் பேசியதாவது:
இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனைதான் ’2.0’. இது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் பொழுதுபோக்கு படம். சினிமாவைத் தாண்டி இதுவொரு நல்ல அனுபவமாக இருக்கும். தயாரிப்பாளர் சுபாஷ்கரண் இல்லாவிட்டால் இந்தப் படமே இல்லை. அவருக்கு சினிமா மேல் உள்ள ஆர்வம் காரணமாகவே இப்படியொரு படத்தை தயாரித்திருக்கிறார்.
படத்தின் பெரிய பலம் ரஜினி சார் தான். அவர் எது பண்ணாலும் ஸ்டைல்லா மாஸ்ஸா இருக்கும். அவர் எத்தனையோ படங்கள் நடத்திருந்தாலும் இப்பவும் அவர் நடிப்பு ரொம்ப புதுசா இருக்கும்.
டெல்லியில் க்ளைமாக்ஸ் ஷூட் பண்ணோம். அப்போது அவருக்கு உடல் நிலை சரியில்லை. ஆனால், அவ்வளவு பேரையும் மீண்டும் ஒருங்கிணைப்பது கஷ்டம் என்பதால் டெல்லி வந்து நடித்துத் தந்தார். 18 கிலோ வெயிட் சூட்டை 47 டிகிரி வெயிலையும் பொருட்படுத்தாது நடித்துத் தந்தார். அந்த ஈடுபாடு தான் அவரை இன்றும் சூப்பர் ஸ்டாராக வைத்திருக்கிறது.
அக்ஷய் இந்தப் படத்தில் கஷ்டப்பட்ட மாதிரி எந்தப் படத்துக்கும் கஷ்டப்பட்டிருக்க மாட்டார். அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மான் ஃபர்ஸ்ட் டிராப்ட், செகண்ட் ட்ராஃப்ட் என்பது போல் இன்னமும் அவர் இசையை தீட்டிக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் எனது உதவி இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தை ஊடகங்கள் ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்
இவ்வாறு இயக்குநர் ஷங்கர் பேசினார்