முட்டாள்தனத்தை நிறுத்துங்கள் என்று 'சர்கார்’ சர்ச்சை குறித்து வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘சர்கார்’. இப்படம் வெளியானவுடன் அதிமுகவினர் சில காட்சிகளுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். இது பெரும் சர்ச்சையாக உருவானதைத் தொடர்ந்து, படக்குழுவினர் அக்காட்சிகளை நீக்க ஒப்புக் கொண்டனர்.
'சர்கார்’ படத்தில் வரலட்சுமி கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் இலவசங்களை தீயிட்டுக் கொளுத்துவது போன்ற காட்சிகளுக்குத் தான் அதிமுக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது வரலட்சுமி கதாபாத்திரத்தின் பெயரை ம்யூட் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், சர்கார் சர்ச்சை குறித்து அந்தப் படத்தில் வில்லியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், "ஒரு படத்தைப் பார்த்து பயப்படும் அளவுக்கா இந்த அரசாங்கம் வலுவற்றதாக இருக்கிறது? நீங்களே உங்கள் நற்பெயரைக் கெடுத்துக் கொள்கிறீர்கள்.
எதைச் செய்யக்கூடாதோ அதையே செய்து கொண்டிருக்கிறீர்கள். தயவுசெய்து இத்தகைய முட்டாள்தனத்தை நிறுத்துங்கள். படைப்பாற்றலின் சுதந்திரத்தைப் பறிக்காதீர்கள்" என ட்வீட் செய்துள்ளார்.