தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேசும்போது உற்சாகமாக இருக்கும். ஆனால், அவர் செயலில் எதுவுமில்லை என்று நடிகர் உதயா குற்றம் சாட்டியுள்ளார்.
உதயா நடித்துள்ள 'உத்தரவு மகாராஜா' திரைப்பட வெளியீடு தொடர்பான சர்ச்சை கடந்த சில நாட்களாகவே தயாரிப்பாளர் சங்கத்தில் தொடர்ந்து வருகிறது. அனுமதிக்கப்பட்ட படங்களைத் தாண்டி வேறு பெரிய படங்களும் வெளியாகின்றன. சிறு தயாரிப்பாளர்களைப் பாதுகாக்க விஷால் தவறிவிட்டார் என பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவியை நடிகர் உதயா ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "ஆறு மாதங்களாகவே விஷாலின் நடவடிக்கைகளில் எங்களுக்கு உடன்பாடில்லை. சுயநலப்போக்காகவே நடந்து கொள்கிறார். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்பது மிகப்பெரிய பொறுப்பு. அதை அவர் சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டார். எந்த சிறு தயாரிப்பாளருக்குமே அவர் பாதுகாப்பாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மைக்கை பிடித்துக் கொண்டு நன்றாகப் பேசுகிறார். அப்போது கேட்பதற்கு உற்சாகமாக இருக்கிறது. ஆனால் செயலில் எதுவுமில்லை.
பட வெளியீட்டைக் கண்காணிக்க ஒரு குழு உள்ளது. அதில் சிறு, நடுத்தர, பெரிய பட்ஜெட் படங்களுக்கென தனித்தனி வெளியீட்டுத் தேதிகள் தரப்பட்டன. 16-ம் தேதி 'உத்தரவு மகாராஜா', 'காற்றின் மொழி', 'செய்', 'சித்திரம் பேசுதடி 2' ஆகிய படங்களுக்கு ஒதுக்கப்பட்டது. நாங்கள் விளம்பரங்கள் செய்த பின் திடீரென 'திமிரு புடிச்சவன்' வெளியீட்டை அறிவிக்கிறார்கள். அவர்களுக்கு அனுமதி தரப்படவில்லை.
விஷாலிடம் தனிப்பட்ட முறையில் கேட்டபோது அந்தப் படம் வராது வராது என்றே கடைசி நிமிடம் வரை சொல்லி வந்தார். ஆனால் அந்தப் படம் வெளியானது. ஏற்கெனவே 'சர்கார்' ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்து 'திமிரு புடிச்சவன்', அடுத்து 'காற்றின் மொழி', இதற்குப் பிறகு தான் 'உத்தரவு மகாராஜா'வுக்கு ரசிகர்களின் கவனம் திரும்பும். படத்துக்கான விமர்சனங்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் ரசிகர்கள் படத்தைப் பார்க்க நினைத்தால் படம் அரங்கில் இல்லை" என்று உதயா வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.