தமிழ் சினிமா

வேகமெடுக்கும் ‘பேட்ட’ விளம்பரப் பணிகள்: அமைதி காக்கும் ‘விஸ்வாசம்’ படக்குழு

செய்திப்பிரிவு

பொங்கல் வெளியீட்டை முன்னிட்டு ‘பேட்ட’ படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதமாகத் தொடங்கியுள்ளது படக்குழு. ஆனால், ‘விஸ்வாசம்’ படக்குழுவோ அமைதிகாத்து வருகிறது.

முதன் முறையாக 2019-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரஜினி மற்றும் அஜித் படங்கள் நேரடிப் போட்டியாகக் களமிறக்கப்படுகின்றன. இதுவரை இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியானதில்லை என்பதால், வசூல் எப்படியிருக்கும், யாருடைய படத்தின் உரிமையைக் கைப்பற்றலாம் என்று விநியோகஸ்தர்கள் மத்தியில் குழப்பம் எழத் தொடங்கியுள்ளது.

நவம்பர் 23, 2017-ம் ஆண்டு சத்யஜோதி நிறுவனம் தங்களுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், அஜித் - சிவா கூட்டணியின் அடுத்த படத்தைத் தயாரிக்கிறோம் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்து நேற்றுடன் (நவம்பர் 23) ஒரு வருடமாகிறது. நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இதுவரை 2 போஸ்டர்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. பொங்கல் வெளியீடு உறுதி என்று அறிவித்து, விநியோகஸ்தர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கமும் இப்படத்துக்கான வெளியீட்டுத் தேதியை அனுமதித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், 2018-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி தான் ‘பேட்ட’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் படக்குழு முடித்துவிட்டது. குலுமாணாலி, சென்னை, டார்ஜிலிங் என தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக், சசிகுமார் என ஏகப்பட்ட நடிகர்கள் ரஜினியுடன் நடித்திருக்கின்றனர். இப்படமும் பொங்கல் வெளியீடு என சமீபத்தில் அறிவித்தனர்.

தற்போது டிசம்பர் 9-ம் தேதி ‘பேட்ட’ இசை வெளியீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3-ம் தேதி ஒரு பாடலும், டிசம்பர் 7-ம் தேதி மற்றொரு பாடலும் இணையத்தில் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. ‘சர்கார்’ திரைப்படம் இன்னும் நன்றாகப் பல திரையரங்குகளில் திரையிடப்பட்டு வந்தாலும், ‘பேட்ட’ படத்தில் தனது கவனத்தை செலுத்தத் தொடங்கிவிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

இந்தாண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, படப்பிடிப்பு முடிந்து, விளம்பரப்படுத்தும் பணிகளையும் தொடங்கிவிட்டது ‘பேட்ட’ படக்குழு. ஆனால், 2017-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ‘விஸ்வாசம்’, இன்னும் தங்களது விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவில்லை.

ரஜினியுடன் பல நடிகர்கள் நடித்திருப்பதால், அனைவருமே ‘பேட்ட’ படத்தைப் பற்றிய ட்வீட், பேட்டிகள் என சமூக வலைதளங்களில் இருக்கும். ஆனால், ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்திருக்கும் அஜித், நயன்தாரா இருவருமே தங்களுடைய படத்தை விளம்பரப்படுத்த மாட்டார்கள். ‘பேட்ட’  பிரமாண்டமான விளம்பரப்படுத்தலுக்கு முன் ‘விஸ்வாசம்’ என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பது இன்னும் ஓரிரு வாரங்களில் தெரியவரும்.

SCROLL FOR NEXT