தமிழ் சினிமா

டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து பாடகி சின்மயி திடீர் நீக்கம்

செய்திப்பிரிவு

கடந்த 2 ஆண்டுகளாக சந்தா தொகை செலுத்தாத காரணத்தால் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கிவிட்டதாக  பாடகி சின்மயி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதேசமயம் தன்னை நீக்குவதற்கு முன் தென்னிந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் அமைப்பு எந்தவிதமான முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை என்றும் சின்மயி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து சமூகஊடகங்களில் பாடகி சின்மயி பதிவிட்டுள்ளதாவது:

" கடந்த 2 ஆண்டுகளாக டப்பிங் கலைஞர்கள் சங்கத்துக்கு ஆண்டு சந்தா செலுத்தவில்லை என்று கூறி என்னைச் சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர். இதன் மூலம் நான் இனிமேல் தமிழ்ப்படங்களுக்கு டப்பிங் பேச மாட்டேன். என்னுடைய டப்பிங் வருவாயில் 10 சதவீதத்தை எடுத்துக்கொண்டிருந்தால், இதைத் தடுத்திருக்கலாம்.

தமிழ் சினிமா விதிகளின்படி, டப்பிங் சங்கத்தில் ஒருவர் உறுப்பினர் இல்லாத பட்சத்தில், அவர் திரைப்படங்களில் பணியாற்ற முடியாது. நான் செலுத்த வேண்டிய சந்தா தொகை இருப்பு குறித்து எந்தவிதமான எழுத்துப்பூர்வமான, தகவல்தொடர்பும் இல்லாமல் என்னுடைய அடிப்படை உறுப்பினர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அடுத்துவரும் படங்களுக்கு நான் டப்பிங் செய்தால் அது எனக்கு வியப்புதான். டப்பிங் சங்கத்தில் இருந்துதான் முதன்முதலில் நீக்கப்படுவேன் என்றுநான் எதிர்பார்த்தேன். என்னிடம் இருந்து உறுப்பினர் அட்டையை இன்னும் திரும்பப் பெறவில்லை''.

இவ்வாறு சின்மயி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT