ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வருகிற 29-ம் தேதி ரிலீஸாகும் படம் ‘2.0’. எமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், அக்ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள ரஜினி, ரசிகர் மன்றக் காட்சியின் டிக்கெட் விலை குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டிப்பு காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
மேலும், ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு, சென்னையில் இருந்து இரண்டு லாரிகள் மூலம் நிவாரணப் பொருட்களை நேற்று (நவம்பர் 22) இரவு அனுப்பி வைத்துள்ளார். ரஜினி மக்கள் மன்றம் மூலம் இந்த நிவாரணப் பொருட்கள் பிரித்து அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் ரஜினி ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
ஆனால், அதில் உண்மையில்லை என்று தெரியவந்துள்ளது. ‘ரஜினியின் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அவர் நலமுடன் உள்ளார்’ என ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.