தமிழ் சினிமா

நல்ல நண்பனை இழந்துவிட்டேன்: அம்பரீஷ் மறைவுக்கு ரஜினி உருக்கம்

செய்திப்பிரிவு

நல்ல நண்பனை இழந்துவிட்டேன் என்று கன்னட நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு ரஜினி உருக்கமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

கன்னடத் திரையுலகில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவரான அம்பரீஷ், சிறுநீரகக் கோளாறால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நேற்று (நவம்பர் 24) இரவு காலமானார். அவருக்கு கன்னட திரையுலகினர் மட்டுமன்றி பல்வேறு திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் அம்பரீஷ். திரையுலகில் வில்லனாக நுழைந்து, கதாநாயக அந்தஸ்துக்கு உயர்ந்து, அரசியலிலும் கால்பதித்து, மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர். அவருக்கு வயது 66.

’முரட்டுக்காளை’, ’திசை மாறிய பறவைகள்’ உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப்படங்களில் நடித்த சுமலதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அம்பரீஷ். ரஜினிக்கு மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர் அம்பரீஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவுக்கு ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில், “அற்புதமான மனிதர்.. என் அருமை நண்பர்.. உங்களை இன்று இழந்துவிட்டோம். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். ” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், இன்று (நவம்பர் 25) காலையில் கர்நாடகாவுக்குச் சென்று நேரிலும் அஞ்சலி செலுத்தினார் ரஜினி.

SCROLL FOR NEXT