'தளபதி 63' படத்தில் நடிப்பதாக வெளியான செய்திகளுக்கு, தனது ட்விட்டர் பக்கத்தில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா
'சர்கார்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய். இதன் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் பூஜையுடன் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நடிகர்களைத் தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நவம்பர் 14-ம் தேதி இப்படத்தைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக படம் பற்றிய தகவல்களை அறிவித்தது. அன்று முதலே இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன. ஆனால், நயன்தாரா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று படக்குழு அறிவித்தது.
இதனால், தொடர்ச்சியாக ராஷ்மிகா மந்தனாவைச் சுற்றிய வதந்திகளுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்திருக்கிறார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் “விஜய் சார் மற்று அட்லீ சாரின் அடுத்த படத்தில் நான் இருக்கிறேனா என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறீர்கள்.
இந்த முறை அது நடக்கவில்லை. ஆனால், விரைவில் அது நடக்கும் என்று நான் நம்புகிறேன். உங்களைப் போலவே நானும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளேன். உங்களிடமிருந்து இத்தகைய ஆதரவு நெகிழச் செய்கிறது. தமிழில் நிச்சயம் எனது முதல் படம் விரைவில் வரும். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். திரும்பவும் சொல்கிறேன் நன்றி” என்று தெரிவித்திருக்கிறார் ராஷ்மிகா.
‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா என்பது குறிப்பிடத்தக்கது.
'தளபதி 63' என பெயரிடப்பட்டுள்ள இப்படம் முழுக்க விளையாட்டை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதில் விஜய்யுடன் நடிக்க விவேக், யோகி பாபு ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, சண்டை வடிவமைப்பாளராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக், எடிட்டராக ரூபன், கலை இயக்குநராக முத்துராஜ் ஆகியோரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இப்படம் 2019-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.