‘காற்றின் மொழி’ படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் தலா 2 ரூபாய் 'கஜா' புயல் நிவாரண நிதிக்கு வழங்கப்பட உள்ளது.
ஜோதிகா நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘காற்றின் மொழி’. ராதாமோகன் இயக்கிய இந்தப் படம், இந்தியில் வித்யா பாலன் நடிப்பில் வெளியான ‘துமாரி சுலு’ படத்தின் ரீமேக். விதார்த், லட்சுமி மஞ்சு, இளங்கோ குமரவேல், சான்ட்ரா, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கரையைக் கடந்த ‘கஜா’ புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின.
45-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்த நிலையில், ஏராளமான கால்நடைகளும் இறந்துவிட்டன. அத்துடன், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருந்த தென்னை, வாழை மரங்கள் லட்சக்கணக்கில் அழிந்துவிட்டன. இந்த இழப்பில் இருந்து மீள இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் தங்களால் ஆன உதவியைச் செய்து வருகின்றனர். சிவகுமார் குடும்பம் 50 லட்சம் ரூபாய், விஜய் சேதுபதி 25 லட்சம் ரூபாய், சிவகார்த்திகேயன் 20 லட்சம் ரூபாய், ஜீ.வி.பிரகாஷ் இரண்டு லாரிகளில் நிவாரணப் பொருட்கள் என திரைத்துறையில் இருந்தும் உதவிகள் நீள்கின்றன.
இந்நிலையில், இன்று முதல் ‘காற்றின் மொழி’ படத்துக்காக விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு டிக்கெட்டிலும், தயாரிப்பாளர் ஷேரில் இருந்து தலா 2 ரூபாய் தமிழக அரசின் ‘கஜா’ புயல் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அறிவித்துள்ளார்.