மறைந்த இயக்குநர் கே.பாலசந் தரின் மனைவி ராஜம் நேற்று காலமானார். அவருக்கு வயது 82.
பாலசந்தரின் திரையுலகப் பயணத்துக்கு உறுதுணையாக 58 ஆண்டுகள் உடன் இருந்தவர் ராஜம். இவர் நாகர்கோவில் அடுத்த கிருஷ்ணன்கோவிலில் பிறந்தவர். கடந்த 4 ஆண்டுகளாக மகள் புஷ்பா கந்தசாமி, மருமகள் கீதா கைலாசம் ஆகியோருடன் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு நேற்று காலமானார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார், விவேக், டெல்லி கணேஷ், யூகி சேது, கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் சரண், சமுத்திரகனி, அமீர், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்குகளை இளைய மகன் பிரசன்னா செய்ய உடல் தகனம் செய்யப்பட்டது.