'என்.ஜி.கே' படம் தொடர்பாக சூர்யா ரசிகர்களுக்கு, இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘என்.ஜி.கே’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இயக்குநர் செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நிறுத்தப்பட்டது.
மீண்டும் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க படக்குழு ஆயுத்தமாகி வருகிறது. அதுவே இறுதிக்கட்டப் படப்பிடிப்பாக இருக்கும் என்றும், டிசம்பர் மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அவ்வப்போது சூர்யா ரசிகர்கள், அடுத்த 'என்.ஜி.கே' அப்டேட் என்று படக்குழுவினரிடம் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வந்தார்கள். மேலும், சிலர் மீம்ஸ்கள் தயார் செய்தும் வெளியிட்டார்கள்.
இது தொடர்பாக இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் மனமார்ந்த வேண்டுகோள். நாங்கள் அமைதியாக, கடுமையாக உழைத்து வருகிறோம். அப்டேட்டுகள் சரியான நேரத்தில் வரும். மூன்று நாளைக்கு ஒரு முறையோ, வாரா வாரமோ வராது.. எங்களுக்கு நீங்கள் பக்க பலமாக இருந்தால் எங்கள் இலக்கை நோக்கி இன்னும் கடுமையாக உழைக்கும் பலம் எங்களுக்குக் கிடைக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.