தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், நவம்பர் 16-ம் தேதி ‘திமிரு பிடிச்சவன்’ வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
தீபாவளி தினத்தன்று வெளியாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் நல்ல வசூல் செய்து வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக நவம்பர் 16-ம் தேதியனறு ‘காற்றின் மொழி’, ‘செய்’, ‘சித்திரம் பேசுதடி 2’ மற்றும் ‘உத்தரவு மகாராஜா’ ஆகிய படங்கள் வெளியாக தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதியளித்தது.
இப்படங்களோடு விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘திமிரு பிடிச்சவன்’ படமும் வெளியாகும் என விளம்பரப்படுத்தினார்கள். ஆனால், ‘சர்கார்’ படத்தோடு தீபாவளியன்று வெளியாகும் என்றே முன்பு விளம்பரப்படுத்தியிருந்தார்கள். இதனால், நவம்பர் 16-ம் தேதியன்று வெளியாகவுள்ள இதர படங்களின் தயாரிப்பாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தார்கள்.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திடமும் முறையிட்டார்கள். இதனைத் தொடர்ந்து “’உத்தரவு மகாராஜா’, ’செய்’, ‘சித்திரம் பேசுதடி’, ‘காற்றின் மொழி’ ஆகிய படங்களைத் தவிர நவம்பர் 16-ம் தேதிக்கு வேறு படங்களுக்கு நமது சங்கம், அனுமதி வழங்கப் படவில்லை.
சிறிய படங்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த தேதியில் அனுமதிப் பெறாத படங்கள் வந்து மேற்படி படங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் உறுப்பினர்கள் மீது சங்கவிதிப்படி, உறுதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுககப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருக்கிறது. இதனால் ‘திமிரு பிடிச்சவன்’ வெளியாகுமா, இல்லையா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
‘சர்கார்’ திரைப்படம் அதிகப்படியான திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருவதால், நவம்பர் 16-ம் தேதி வெளியாகும் 4 படங்களுக்குமே மிகக்குறைவான திரையரங்குகளே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.