தமிழ் சினிமா

‘சார்லி சாப்ளின் 2’ அப்டேட்: பாடலாசிரியராக அறிமுகமாகும் பிரபுதேவா

செய்திப்பிரிவு

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் மூலம் பாடலாசிரியராகவும் அறிமுகமாகிறார் பிரபுதேவா.

‘சார்லி சாப்ளின்’ படத்தைத் தொடர்ந்து, ‘சார்லி சாப்ளின் 2’ என்ற பெயரில் படமொன்றை இயக்கியுள்ளார் ஷக்தி சிதம்பரம். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரமாகப் பணிபுரிந்து வருகிறது படக்குழு.

பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அதா ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை 2 பாடல்கள் மற்றும் அவற்றின் வீடியோ உருவாக்கம் உள்ளிட்டவற்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் இடம்பெறும் ‘இவள இவள ரொம்பப் பிடிச்சிருக்கு’ என்ற பாடலை எழுதியிருக்கிறார் பிரபுதேவா. இதுவரை நடிகர், இயக்குநர் மற்றும் நடன இயக்குநர் எனப் பணியாற்றி வந்தவர், முதன்முறையாக ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் பாடலாசிரியராகவும் தன்னை முன்னிலைப்படுத்தி இருக்கிறார். இப்பாடல் நாளை (நவம்பர் 23) காலை 10 மணியளவில் சமூக வலைத்தளங்களில் வெளியாக உள்ளது.=

‘சார்லி சாப்ளின் 2’ படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் எழுத, அம்ரீஷ் இசையமைத்து வருகிறார். இப்படம் டிசம்பரில் வெளியாகும் எனத் தெரிகிறது.

2002-ம் ஆண்டு ‘சார்லி சாப்ளின்’ படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியில் ‘நோ எண்ட்ரி’, தெலுங்கில் ‘பெல்லம் ஊர் எல்தே’, மலையாளத்தில் ‘ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்’, கன்னடத்தில் ‘அல்லா புல்லா சுல்லா’ மற்றும் போஜ்பூரி, ஒரியா, மராத்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT