தமிழ் சினிமா

கமல் கமல்தான். அவரோட இடமே வேற! - ஜீ தமிழ் பேட்டியில் நெகிழ்ந்த ரஜினி

செய்திப்பிரிவு

கமல் கமல்தான். அவரோட இடமே வேற!  என்று ஜீ தமிழுக்கு அளித்த பேட்டியில் ரஜினி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘2.0’. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை பெரும் விலைக் கொடுத்து வாங்கியிருக்கிறது ஜீ தமிழ்.

இதற்காக ஜீ தமிழுக்கு ரஜினி பேட்டியளித்தார். இது தீபாவளி ஸ்பெஷலாக ஒளிபரப்பப்பட்டது. இதில் ரஜினி அளித்த பதில்கள் மிகவும் எதார்த்தமாக இருந்ததாக திரையுலக பிரபலங்கள், ரஜினி ரசிகர்கள் என சமூகவலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

கமலுடன் இருக்கும் நட்பு, அவர் மீதான அன்பை பல்வேறு பேட்டிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார் ரஜினி. அது ஜீ தமிழ் பேட்டியிலும் எதிரொலித்தது. கமல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ரஜினி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

நான் சினிமாவுக்குள்ளே வரும் போதே கமல் பெரிய ஸ்டாராக இருந்தார். கிட்டத்தட்ட அன்றைக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார். டான்ஸ், ஆக்டிங் என எல்லா விஷயங்களிலும் பிரமாதப்படுத்துவார் கமல். பெண்கள் மத்தியிலும் கல்லூரிப் பெண்கள் மத்தியிலும் கமலுக்கு அப்படியொரு கிரேஸ் இருந்தது.

அதிலும் கமல், தமிழ்நாட்டுக்கு மட்டுமே ஆன நடிகராக இல்லை. கர்நாடகா, ஆந்திரா, கேரளா என்று பல மாநிலங்களிலும் சக்ஸஸ் கொடுத்த நடிகராக இருந்தார்.

கமலோடு சேர்ந்து நடித்ததே மிகப்பெரிய விஷயம் எனக்கு. ஒருமுறை, என்னை ஏற்றிக்கொண்டு செல்ல கார் வரவில்லை. அப்போது, கமல், அவர் செல்லும் காரில் என்னை ஏற்றிக்கொண்டார். எனக்கு ஒருமாதிரியாகிவிட்டது. கமல் எவ்ளோ பெரிய ஆக்டர். அவரோட நாம சேர்ந்து கார்ல போறோமா? இது கனவா, நிஜமான்னு கிள்ளிப் பாத்துக்கிட்டேன்.

அதுக்குப் பிறகு நிறைய படங்கள் பண்ணினேன். கடவுள் அருளால இந்த இடத்துக்கு வந்திருக்கேன். அதுக்காக, கமல் இடத்துக்கு வந்துட்டேன்னு நான் சொல்லிக்கமுடியாது. கமல் கமல்தான். அவரோட இடமே வேற!

இவ்வாறு ரஜினி கூறினார்.

SCROLL FOR NEXT