‘மேயாத மான்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். வைபவ், பிரியா பவானிசங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர். ரொமான்டிக் காமெடிப் படமான இது, கடந்த வருடம் ரிலீஸானது.
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்குகிறார் ரத்னகுமார். ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்துக்கு ‘ஆடை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அமலா பால் பிரதான வேடத்தில் நடிக்கிறார்.
விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, பிரதீப் குமார் இசையமைக்கிறார். வி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கான ரெக்கார்டிங், படப்பிடிப்புத் தளத்திலேயே நேரடியாக நடைபெறுகிறது.
இதுகுறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள ரத்னகுமார், “ஆடை லைவ் ஒலிப்பதிவு. படப்பிடிப்பிலேயே ஒலிப்பதிவும் செய்யும்போது, பேச்சு நடை, பேசும் விதம், வசனங்களை நினைவில் வைத்துக்கொள்ளுதல், மூச்சுக் கட்டுப்பாடு, பொறுமை மற்றும் ஒட்டுமொத்தக் குழுவின் 100 சதவீத ஒழுக்கம் என அனைத்தும் தேவைப்படும். எல்லாவற்றுக்குமான சவால் இது. சவால் ஏற்கப்பட்டு விட்டது” எனத் தெரிவித்துள்ளார்.