தமிழ் சினிமா

‘கஜா’ நிவாரண நிதியாக ரூ.25 லட்சம்: மரக்கன்றுகளுடன் களமிறங்கும் விஜய் சேதுபதி

செய்திப்பிரிவு

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, மரக்கன்றுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் என 25 லட்ச ரூபாய்க்கு நிதியுதவி அறிவித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

‘கஜா’ புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளதாக விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பல ஆண்டுகளாக செலவிட்டு வளர்த்த தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. அதிலிருந்து விவசாயிகள் மீள பல ஆண்டுகள் ஆகும். ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன.

இந்தப் புயலால் மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். 347 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன. 39,938 மின் கம்பங்கள் விழுந்துள்ளன.

3,559 கி.மீ. நீளமுள்ள மின் கம்பிகள் சேதமடைந்துள்ளன. 56,942 குடிசை வீடுகள் முழுமையாகவும், 3,404 குடிசை வீடுகள் பகுதியாகவும், 30,328 ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் இருந்து 2 லட்சத்து 49 ஆயிரத்து 83 பேர், 493 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

‘கஜா’ புயலில் இருந்து மீண்டுவர பலரும் தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகின்றனர். சூர்யா, கார்த்தி, ஜோதிகா உள்ளிட்ட நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இந்த உதவி செய்யப்பட இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி 25 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார். மின்சாரம் வருவதற்கு நீண்ட நாட்கள் ஆகும் என்பதால், சார்ஜிங் லைட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தருவதோடு, மரங்களை இழந்தவர்களின் தோப்புகள் புனரமைக்கப்பட்டு, அவர்களுக்கு தென்னை, மா, பலா கன்றுகளும் வழங்கப்பட உள்ளன.

இந்த உதவிகள், விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி மன்றத்தினர் மூலம் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

SCROLL FOR NEXT