தமிழ் சினிமா

‘தளபதி 63’ படத்துக்காக ஒரு வருடத்துக்கு முன்பே 2000 டிக்கெட்டுகளை புக் செய்த விஜய் ரசிகர்

செய்திப்பிரிவு

அடுத்த வருடம் வெளியாக இருக்கும் ‘தளபதி 63’ படத்துக்காக, இப்போதே ஒரு ரசிகர் 2000 டிக்கெட்டுகள் வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்.

விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு ரிலீஸான படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்தார். வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.

‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் மூன்றாவது படம் இது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.

ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரூபன் எடிட்டராகவு, முத்துராஜ் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.

அடுத்த வருடம் (2019) தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜய் ரசிகர் ஒருவர் முதல் நாள் பார்க்க இப்போதே 2000 டிக்கெட்டுகள் வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். சென்னை, கோயம்பேடு ரோகிணி திரையரங்கத்தைச் சேர்ந்த நிகிலேஷ் சூர்யாவின் நண்பர் தான் அந்த விஜய் ரசிகர். எனவே, இந்தத் தகவலை அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

“அதிகாலை 4 மணி காட்சிக்கு 700 டிக்கெட்டுகளும், 8 மணி காட்சிக்கு 800 டிக்கெட்டுகளும், மதியம் 1 மணி காட்சிக்கு 300 டிக்கெட்டுகளும், மாலை 6 மணி காட்சிக்கு 200 டிக்கெட்டுகளும் வேண்டும்” என அந்த விஜய் ரசிகர் நிகிலேஷ் சூர்யாவுக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியுள்ளார்.

அதை ட்விட்டரில் பகிர்ந்துள்ள நிகிலேஷ் சூர்யா, “ஒரு வருடத்துக்கு முன்பே அட்வான்ஸாக டிக்கெட் புக்காகி விட்டது. ‘தளபதி 63’ சரவெடி தொடங்கிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT