தமிழ் சினிமா

சசிகுமாரின் ‘கொம்புவச்ச சிங்கம்டா’: பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு

செய்திப்பிரிவு

சசிகுமார், லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான ‘சுந்தர பாண்டியன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். அதன்பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும் ‘சத்ரியன்’ என இரண்டு தோல்விப் படங்களைக் கொடுத்த எஸ்.ஆர்.பிரபாகரன், மறுபடியும் சசிகுமாரோடு கைகோர்த்துள்ளார்.

‘கொம்புவச்ச சிங்கம்டா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், சசிகுமார் ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் சூரி, யோகி பாபு, இயக்குநர் மகேந்திரன், ஹரீஷ் பெராடி, ஸ்ரீபிரியங்கா, தீபா ராமானுஜம், இந்தர் குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.

1990 - 1994 காலகட்டத்தில் தமிழகத்தின் சிறு நகரம் ஒன்றில் நடைபெற்ற பரபரப்பான சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்படுகிறது. நேற்று (நவம்பர் 12)இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் பூஜையுடன் தொடங்கியது. இயக்குநர் சமுத்திரக்கனி க்ளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

பொள்ளாச்சி, பழனி, தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர், குற்றாலம் ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கும் இந்தன் படப்பிடிப்பு, ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.

‘குற்றம் 23’ மற்றும் ‘தடம்’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ள இந்தர் குமார், இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

SCROLL FOR NEXT