‘டாடி மம்மி’ பாடல் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சுக்கு, பாடலாசிரியர் விவேகா மறைமுகமாகக் கிண்டல் செய்திருக்கிறார்.
‘சர்கார்’ படத்தில் இலவசப் பொருட்களைத் தீயில் தூக்கிப்போடும் காட்சிக்கு, தமிழக அமைச்சர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அதிமுகவினர் திரையரங்க வாசலில் போராட்டம் நடத்தத் தொடங்கியதால், அக்காட்சியைப் படக்குழு நீக்க ஒப்புக் கொண்டது.
இந்நிலையில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் விழா ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பேசும்போது, “திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துகளைப் பரப்பினால் குழந்தைகள் நல்லவர்களாக வருவார்கள். திரைப்படங்கள் மூலம் எம்ஜிஆர் நல்ல கருத்துகளைப் பரப்பினார். ஆனால், இப்போது ‘டாடி மம்மி வீட்டில் இல்லை’ எனப் பாடுகிறார்கள்” என்று தெரிவித்தார்.
அமைச்சர் ஜெயக்குமாரின் இப்பேட்டி தொடர்பாக பாடலாசிரியர் விவேகா தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் இந்தப் பாடலை எழுதி 9 வருஷம் ஆகுது. இதோட 3 முறை அமைச்சர் ஜெயக்குமார் இப்பாடலை விமர்சித்துப் பேட்டி கொடுத்திருக்கார். ஒரு பாடலாசிரியராக ரசிகர்களின் உளவியல் அறிவேன். அமைச்சர் இப்பாடலின் மிகத்தீவிர ரசிகர்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.
‘வில்லு’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘டாடி மம்மி’ பாடலை எழுதியவர் விவேகா என்பது குறிப்பிடத்தக்கது.