'சர்கார்' கதை சர்ச்சை காரணமாக சமூக வலைதளங்களில் தன்னை விமர்சித்த ரசிகர்களுக்கு சாந்தனு பதில் அளித்திருக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள ’சர்கார்’ திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று வருண் ராஜேந்திரன் என்பவர் புகார் அளிக்க, கதாசிரியர் சங்கத் தலைவர் பாக்யராஜும் இரண்டு கதைகளும் ஒன்று எனத் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ’சர்கார்’ படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தது. இந்த நிலையில் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ’சர்கார்’ கதையை ஊடகங்களிடம் தெரிவித்ததற்காக இயக்குநர் பாக்யராஜையும், அவரது மகன் நடிகர் சாந்தனுவையும் சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் விமர்சித்தனர்.
இந்த நிலையில் விமர்சனங்களுக்கு சாந்தனு பதிலத்துள்ளார். இதுகுறித்து சாத்தனு தனது ட்விட்டர் பக்கத்தில், ’’சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் “இல்லை” ....என்றைக்கும் விஜய் அண்ணா , எனக்கு விஜய் அண்ணா தான் ! கதையை என் அப்பா வெளியே கூறியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தீபாவளியை கொண்டாடுவோம்...சர்கார் கொண்டாடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.