மீடு சர்ச்சை தமிழ் திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தினமும் பல குற்றச்சாட்டுகளும், சர்ச்சைக் கருத்துகளும் செய்திகளில் வந்த வண்ணம் உள்ளன. தமிழ் திரையுலகில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தெரிவித்த புகார் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் சுசி கணேசன், நடிகர் அர்ஜுன் ஆகியோர் மீது மீடூ புகார்கள் கூறியிருக்கிறார்கள்.
இந்நிலையில், ’பரியேறும் பெருமாள்’, ’கடைக்குட்டி சிங்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள குணச்சித்திர நடிகர் மாரிமுத்து, யூடியூப் சேனலுக்கு ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். இதில் மீடூ சர்ச்சை குறித்தும், கவிஞர் வைரமுத்து குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு, 'அவர் பெண்ணைத்தானே கூப்பிட்டார், ஆணைக் கூப்பிட்டால்தானே தவறு' என்கிற ரீதியில் அதிரடியாக பதில் கூறியிருந்தார். இந்த பதில் மட்டும் இணையதளத்தில் தனி வீடியோவாக பலரால் பகிரப்பட்டு வருகிறது. அவரது பேச்சுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
மாரிமுத்துவின் இந்தப் பேச்சுக்கு சித்தார்த் தன் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். தற்போது மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
மாரிமுத்து என்கிற இந்த குறுகிய மனப்பான்மை கொண்ட, ஏமாற்றம் தரும் மனிதர், இந்த பத்தாண்டுகளில் எனக்குப் பிடித்த தமிழ் படத்தில் நடித்திருக்கக்கூடாது என்று விரும்புகிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் பங்கு எப்போதும் அந்தப் படத்தில் இருக்கும். அது சமத்துவம் மற்றும் மாற்றம் குறித்த அற்புதமான சினிமா. அவரது இந்த பேட்டி என்னையும், பலரையும் காயப்படுத்தியுள்ளது.
சாதி திமிரைத் தூக்கிப் பிடிக்கும் படங்களுக்கு எதிராக தமிழ் சினிமா வலுவான படங்களை எடுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட சாதியினரை உயர்த்திப் பேசும், பட தலைப்புகள், கதை, வசனங்கள் ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட வேண்டும். சாதி மனிதனால் உருவாக்கப்பட்ட சாபம். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அதன் தாக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வலிமையைப் பெற வேண்டும்.
நான் ஒரு அமானுஷ்ய படம் தயாரித்தபோது, ’நாங்கள் சமூகத்தில் இது போன்ற நம்பிக்கைகளை ஊக்குவிக்கவில்லை’ என்று தணிக்கைத் துறை அறிவிக்கச் சொன்னார்கள். உண்மையான அச்சுறுத்தலான சாதியப் படங்களுக்கும் ஏன் அதுபோல பின்பற்றக்கூடாது. அதுதான் மிக முக்கியம்.
(பசும்பொன் முத்துராமலிங்கம்) இந்த உயர்ந்த மனிதரின் பெயரிடப்பட்ட சாலையில் தான் நான் வசிக்கிறேன். அவரது 110-வது பிறந்தநாள் இன்று. அவரை எனக்கு பசும்பொன் முத்துராமலிங்கம் நல்லவர் என்றே தெரியும். அவரை அப்படியே அழைப்போம். அவரது புகழும், நினைவுகளும் மாறவே மாறாது. நீங்கள் விரும்பும் மாற்றமாக நீங்கள் இருங்க. காலப்போக்கில் மாற்றத்தைக் காண்போம். எதிர்காலம் காத்திருக்கிறது.
இவ்வாறு சித்தார்த் தெரிவித்திருக்கிறார்.