‘தேள்’ படத்தில் பிரபுதேவாவுக்கு நாயகியாக சம்யுக்தாவை ஒப்பந்தம் செய்திருக்கிறது படக்குழு.
2019-ல் தான் சல்மான்கான் படத்தை இயக்கவுள்ளதால், தமிழில் பல்வேறு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் பிரபுதேவா. இதில் ஹரிகுமார் இயக்கத்தில் ‘தேள்’ படமும் அடங்கும். இதனை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
சி.சத்யா இசையமைப்பாளராகவும், விக்னேஷ் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாயகி மற்றும் இதர நடிகர்கள் தேர்வில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு.
தற்போது நாயகியாக சம்யுக்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருடன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ஈஸ்வரி ராவும் நடிக்கவுள்ளார். இவரது கதாபாத்திரம் மட்டும் சஸ்பென்ஸ் என்று தெரிவித்திருக்கிறது படக்குழு. யோகிபாபுவும் பிரபுதேவாவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
’மெர்குரி’ படத்தில் பிரபுதேவாவுடன் நடிக்க சம்யுக்தா ஒப்பந்தமாகி, பின்னர் விலகிவிட்டார். தேதிகள் பிரச்சினை மற்றும் மற்றொரு படக்குழுவினர் கொடுத்த புகார் ஆகியவரைத் தான் காரணம் என கூறப்பட்டது. அவரது கதாபாத்திரத்தில் தான் இந்துஜா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியில் தமிழ் சினிமாவில் ‘தேள்’ படத்தின் மூலம் சம்யுக்தா அறிமுகமாகவுள்ளார். அதுவும் பிரபுதேவாவுக்கு நாயகியாகவே என்பது கூடுதல் அம்சம்.