இயக்குநர் சுந்தர்.சியின் அனுமதியின்றி 'அரண்மனை' டீஸர் வெளியாகி உள்ளதாக, நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிக்க சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் 'அரண்மனை'. சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் பேய் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகமான கிராபிக்ஸ் பணிகள் இருந்ததால், இப்படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில், 'அரண்மனை' டீஸர் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று YOUTUBE இணையத்தில் வெளியானது.
இயக்குநர் சுந்தர்.சியின் அனுமதியின்றி தயாரிப்பாளரே இப்படத்தின் டீஸரை வெளியிட்டு இருபப்தாக நடிகை குஷ்பு தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளார்.
"'அரண்மனை' படத்தின் டீஸர் இயக்குநரின் ஒப்புதல் இல்லாமல், அவருக்கு தெரியாமல் வெளிவந்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்தில் இருக்கும் சில விஷமிகளால் வெளியாகி இருக்கிறது.
இந்த டீஸரில், கிராபிக்ஸ் மற்றும் பின்னணி இசை ஆகியவை முழுமை அடையாமல் இருக்கிறது. இப்படத்திற்காக நிறைய நபர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஆகவே, அதிகாரப்பூர்வ வெளியீட்டுற்கு காத்திருங்கள்.
டீஸர் வெளியானது குறித்து இயக்குநர் சுந்தர்.சி பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இப்படம் எங்களது சொந்த தயாரிப்பு இல்லை என்பதால் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. 'அரண்மனை' படத்திற்கு ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
'அரண்மனை' படத்தை செம்மையாக்குவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதால் ரசிகர்கள் பட ரிலீஸிற்கு பொறுமை காக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று குஷ்பு தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளார்.