நடிகர் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீஸார் அதிகாலையில் சோதனை மேற்கொண்டனர்.
கெளதம் மேனன் இயக்கி வரும் படத்தில் அஜீத் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பில் அஜீத் இருந்தபோது, திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அஜீத் தரப்பினரிடம் விசாரித்த போது, "அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, இன்று அதிகாலை 4 மணியளவில் அஜீத் வீட்டைச் சுற்றிலும் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனை முடிந்தவுடன், ஒன்றும் பிரச்சினையில்லை என்று போலீஸார் கையொப்பமிட்டு கொடுத்துவிட்டனர். மற்றபடி வந்த போன் கால் வெறும் புரளி மட்டுமே. வேறு ஒன்றும் பிரச்சினையில்லை. அனைவருமே நலமாக இருக்கிறார்கள்" என்று நம்மிடம் அஜீத் தரப்பு கூறியது.
இதனிடையே போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, "ஆம்புலன்ஸ் சேவையான 108-க்கு அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போன் வந்துள்ளது. அவர்கள் எங்களுக்கு தகவல் அளித்தார்கள். நாங்கள் உடனடியாக சோதனை மேற்கொண்டோம்.
வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக நடிகர் அஜீத் தரப்பில் இருந்து எந்தப் புகாரும் வரவில்லை. மேலும்,போன் கால் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.