எதிர்பாராத விஷயங்களை எதிர்பாருங்கள் என்று அடுத்த விஜய் படம் குறித்து அட்லீ சூசகமாகத் தெரிவித்திருக்கிறார்.
’தெறி’, ‘மெர்சல்’ என இரண்டு பெரும் வெற்றிகளைக் கொடுத்தது விஜய் - அட்லீ கூட்டணி. தற்போது ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் உருவாகவுள்ள படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய்.
மூன்றாவது முறையாக இக்கூட்டணி இணைந்துள்ள படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. இதுவரை எந்தவொரு இடத்திலுமே அட்லீ, அடுத்ததாக இயக்கவுள்ள படம் குறித்துப் பேசவில்லை.
இந்நிலையில், எஃப்.எம் ஒன்றின் விருது வழங்கும் விழாவில் அட்லீயிடம் அடுத்த படம் குறித்துக் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:
எப்போதுமே பயப்படவே மாட்டேன். ஆனால், இந்த முறை கொஞ்சம் தைரியம், பொறுப்பு அதிகமாகி இருக்கிறது. இதுவரைக்கும் பண்ணாத ஒன்று பண்ணனும் என்று ஓடிக் கொண்டிருக்கிறேன். கதை முடிவாகி, வேலைகள் போய்க் கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் எதிர்பாராத விஷயங்களை எதிர்பாருங்கள். அது எந்த மாதிரியான படம் என்பதெல்லாம் இப்போதைக்குச் சொல்ல முடியாது.
இவ்வாறு அட்லீ தெரிவித்திருக்கிறார்.