சூர்யா நடிக்கும் ‘என்.ஜி.கே’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘என்.ஜி.கே’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு படுதீவிரமாக சென்னை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இதன் படப்பிடிப்புக்கு இடையே, செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதனால். ‘என்.ஜி.கே’ படம் தீபாவளி வெளியீட்டிலிருந்து பின்வாங்கியிருப்பதாகவும் செய்திகள் கசிந்தன. இது குறித்துப் படக்குழு எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில், மீண்டும் முழுவீச்சில் சென்னையில் ’என்.ஜி.கே’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருக்கிறது. ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் இரவுநேரப் படப்பிடிப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நடித்து வருகிறார்கள்.
மீண்டும் சுறுசுறுப்பாக படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதால், தீபாவளி வெளியீட்டிலிருந்து ‘என்.ஜி.கே’ திரைப்படம் பின்வாங்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இது குறித்து படக்குழுவினரோ “ஒட்டுமொத்த படமும் தயாராகும் வரை எதையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க இயலாது” என்று தெரிவித்தார்கள்.
’என்.ஜி.கே’ படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு, கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் சூர்யா.