இந்த அரசாங்கம் மக்களின் விருப்பமான அரசாங்கமா? என்று ‘பொறுக்கிஸ்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் கரு.பழனியப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கே.என்.ஆர் மூவிஸ் சார்பில் தயாராகியுள்ள படம் 'பொறுக்கிஸ்’. தலைப்புக்குக் கீழே ’அல்ல நாங்கள்' என்ற சப் டைட்டிலும் இடம் பெற்றுள்ளது. ‘பிசாசு’, ‘சவரக்கத்தி’ படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த மஞ்சுநாத், இப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார்.
தயாரிப்பாளர் ராஜா நாயகனாக நடிக்க, லவனிகா நாயகியாக நடித்திருக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் ராதாரவி நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஜே.கே.ரித்தீஷ், இயக்குநர் கரு.பழனியப்பன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் இயக்குநர் கரு.பழனியப்பன் பேசியதாவது:
என் படம் ஒரு காவியம் என்றும், அருமையாக வந்திருக்கிறது என்று கூறுபவர்கள் மத்தியில் ஏதோ ஒரு படம் எடுத்திருக்கிறோம் எனக் கூறும் இயக்குநர் மஞ்சுநாத்தை ஆச்சரியமாகப் பார்க்கிறேன்.
நமக்குக் கிடைக்கும் மேடைகளில், கூடும் பொது இடங்களில் சமூக அக்கறையை எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இதோ பியூஸ் மனுஷ் போன்றவர்கள் அப்படி வெளிப்படுத்தியதால் தான், இப்போது ஒவ்வொரு ஊருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போடுவதற்காக அலைந்து கொண்டிருக்கிறார். என்னைக் கேட்டால், மாணவர்கள் பஸ் பாஸ் எடுப்பது போலப் பியூஸ் மனுஷூம் ஒரு பஸ் பாஸ் எடுத்துக் கொண்டால் எல்லா ஊர்களுக்கும் கையெழுத்து போடப் போய்வருவதற்கு மிகச் சுலபமாக இருக்கும்.
முன்பெல்லாம் ஒருவரைப் பிடிக்காவிட்டால் முதலில் கரண்ட்டைக் கட் பண்ணுவார்கள். இப்போது லேட்டஸ்ட்டாக இன்டர்நெட்டைக் கட் பண்ணுகிறார்கள். இப்பொழுது மஞ்சுநாத்தைப் போல, ராதாரவி, சுரேஷ் காமாட்சி, பியூஸ் மனுஷ் போன்றவர்களைப்போலத் தங்களுடைய சமூக ஆர்வத்தை கடுமையான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்களே, அவர்கள் கூறுவதையும் கேட்டுக்கொண்டு, அதற்கேற்ப தங்களது ஆட்சி செய்யும் அரசாங்கம் தான் மக்களின் விருப்பமான அரசாங்கமாக இருக்கமுடியும்.
இந்த அரசாங்கம் மக்களின் விருப்பமான அரசாங்கமா என்பதை நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள். இப்படி ஒரு படம் எடுத்ததற்காக மஞ்சுநாத்துக்கு எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கரு.பழனியப்பன் பேசினார்.