தமிழ் சினிமா

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் மறுப்பு; அரசியல் விளையாட்டுக்கான நேரம் இல்லை இது: சித்தார்த்

ஸ்கிரீனன்

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் மறுப்பு தெரிவித்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சித்தார்த், அரசியல் விளையாட்டுக்கான நேரம் இல்லை இது.என்றார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.

மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது. மெரினாவில் இடம் ஒதுக்காததிற்கு சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடைசி தமிழ் மாமனிதன் வீழ்ந்துவிட்டான். முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி ஓர் ஒப்பற்ற மனிதர். தமிழகம், தனது உயர்ந்த அரசியல் ஆளுமையை இழந்துள்ளது. நமது அழகிய தமிழ் மொழி கலைஞர் கருணாநிதியின் மறைவை உணரும். அவர் விட்டுச்சென்ற இந்த வெற்றிடத்தை நிரப்ப பல காலமாகும்.

ஏற்கனவே நமக்குத் தந்த சோதனைக்குப் பிறகு (மீண்டும் சோதிக்கும்) ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்ஸின் கடைசி நகர்வு இது. கலைஞருக்கு உரித்தான, அண்ணாவுக்குப் பக்கத்தில் இருக்கும் அந்த இடத்தைக் கொடுங்கள். உங்களுக்கு வேண்டுமென்றால் இதை மெரினாவின் கடைசி நினைவிடமாக ஆக்கிவிடுங்கள். கொஞ்சம் பொறுப்போடும், மரியாதையோடும் செயல்படுங்கள். அற்ப அரசியல் விளையாட்டுக்கான நேரம் இல்லை இது.

காமராஜர் நினைவிடத்துக்கான மறுப்பு பற்றி பேசுவது தற்போது தேவையில்லாதது. அதிமுக பின் நோக்கிப் பார்க்காமல் முன்னோக்கிப் பார்த்து ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். கடந்த கால தவறை சுட்டிக்காட்டி புதிதாக மிகப்பெரிய தவறை செய்துவிடாதீர்கள். சிறந்த அடியெடுத்துவைக்க நல்ல நேரம், நிகழ்காலமே” என்று சித்தார்த் தெரிவித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT