தமிழ் சினிமா

கேரளா வெள்ளத்துக்கு நடிகர் விக்ரம் ரூ.35 லட்சம் நிதியுதவி

செய்திப்பிரிவு

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதுவரை 300-க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளனர்.  சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.  தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் காணொளி மூலம் கோரிக்கை வைத்தார். இதனால் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரளாவுக்கு உதவிகள் குவிந்து வருகின்றன. பல்வேறு திரையுலக பிரபலங்கள்  நிதியுதவி அளித்து வருகின்றனர்.

நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின் 10 லட்ச ரூபாயும், அருள்நிதி 5 லட்ச ரூபாயும் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிதியுதவி வழங்கினார்கள். அதை தொடர்ந்து கமல்ஹாசன் 25 லட்ச ரூபாய், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 25 லட்ச ரூபாய், விஷால் 10 லட்ச ரூபாய், மேலும், விஜய் சேதுபதி 25 லட்ச ரூபாய், தனுஷ் 15 லட்ச ரூபாய், சித்தார்த் 10 லட்ச ரூபாய், நயன்தாரா 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விக்ரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தன் சார்பில் 35 லட்சம் அளித்துள்ளார். சினிமா பிரபலங்களிலேயே நடிகர் விக்ரம்தான் அதிக நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT