அஜித் தனது சம்பளத்தை குறைக்காத காரணத்தினால், படத்தின் தயாரிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
‘குட் பேட் அக்லி’ படத்தினைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தினையும் இயக்கவுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பலரும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். ஆனால், படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதிலேயே சிக்கல் எழுந்துள்ளது.
அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் ‘ஏகே 64’ படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், அஜித் தனக்கு ரூ.185 கோடி சம்பளம் என்பதில் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் ஒட்டுமொத்த தயாரிப்பு என்பது 300 கோடி வரை இருந்தது. இந்தப் பிரச்சினையால் அதன் தயாரிப்பு பொறுப்பில் இருந்து ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் விலகியிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து கோல்ட் மைன்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அந்நிறுவனம் இவ்வளவு பொருட்செலவில் படத்தினை தயாரித்து லாபம் ஈட்ட இயலாது என்பதால் அந்நிறுவனமும் விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனத்திடம் நடத்திய பேச்சுவார்த்தையில், அந்நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
அஜித்தின் சம்பளம் அதிகமாக இருப்பதால் இப்போது வரை ‘ஏகே 64’ படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் இப்போதைக்கு இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பில்லை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.