நான் நடிக்கும் அனைத்து படமும் எனக்கு முதல் படம் போலத்தான் என்று நடிகர் அர்ஜுன் கூறினார்.
அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘தீயவர் குலை நடுங்க’. தினேஷ் இலட்சுமணன் இயக்கி உள்ள இப்படத்தில் ‘பிக் பாஸ்’ அபிராமி, ராம்குமார், ஜி.கே.ரெட்டி, லோகு, வேல ராம மூர்த்தி, ஓஏகே. சுந்தர் உள்ளிட் டோர் நடித்துள்ளனர்.
ஜி.எஸ்.ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.அருள்குமார் தயாரித்துள்ளார். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ளார். பரத் ஆசிவகன் இசை அமைத்துள்ளார். நவ.21ல் வெளியாகும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நடிகர் அர்ஜுன் கூறும்போது, “எனக்கு இது மிக முக்கியமான படம். எனக்கு எல்லா படமுமே முதல் படம் போலத்தான். நான் பல புதிய இயக்குநர்களுடன் பணிபுரிந்துள்ளேன். இப்படத்தின் இயக்குநர் தினேஷ், என்னுடன் நிறைய விவாதித்தாகச் சொன்னார். ஆனால் எல்லாமே படத்துக்காகத் தான்; படத்தை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச்சிறந்த நடிகை, அவர் இன்னும் வளர வாழ்த்துகள்” என்றார்.
இயக்குநர் தினேஷ் இலட்சுமணன் கூறும்போது, “அர்ஜுன் சார் ஷுட்டிங்கில் நிறைய கரெக்ஷன் சொல்வார். அப்போது நிறைய விவாதிப்போம். படம் முடிந்து பார்க்கும் போதுதான் அவரின் அனுபவம் எனக்குப் புரிந்தது. அவ்வளவு ஆதரவாக இருந்தார்.
சட்டத்தைத் தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு அதிரடி ஆக்ஷன் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது” என்றார். படக்குழுவினர் கலந்து கொண்டனர்.