சுந்தர்.சி விலகியதை அடுத்து, ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குவது யார் என்பது குறித்து சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
ரஜினிகாந்தின் 173-வது படத்தை சுந்தர்.சி இயக்குவதாக நவ.5-ம் தேதி அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் 2027-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் ரெட்ஜெயன்ட் மூவிஸ் படத்தை வெளியிடும் என்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், சுந்தர்.சி இணைந்து எடுத்துக் கொண்ட புகைப் படங்களும் வெளியிடப்பட்டன.
‘அருணாச்சலம்’ படத்தை அடுத்து சுந்தர்.சியும் ரஜினிகாந்தும் இணைவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்தப் படத்திலிருந்து விலகுவதாக சுந்தர்.சி அறிவித்தார்.
“தவிர்க்க முடியாத காரணங்களால் ‘தலைவர் 173’ படத்திலிருந்து கனத்த இதயத்துடன் விலகுகிறேன். கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி சாரை இயக்குவது என்பது என் சினிமா வாழ்வின் பெரிய கனவு. ஆனால், சில நேரங்களில் நாம் எதிர்பார்த்த எல்லாமும் நடந்துவிடுவதில்லை. கடந்த சில நாட்களாக இப்படம் குறித்து நாங்கள் மூவரும் பேசிக் கொண்டது என் வாழ்வில் மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவம். அதில் பல பாடங்களைக் கற்றுக் கொண்டேன். என் சினிமா வாழ்வில் அடுத்தடுத்த கட்டத்துக்கு அவை உறுதுணையாக இருக்கும். இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்தவர்களை இந்தச் செய்தி ஏமாற்றியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாயின. இப்போது, கார்த்திக் சுப்புராஜும் அந்த லிஸ்ட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.