சினிமாவில் ஒரு காட்சி, நான்கு பக்கங்களைக் கொண்ட ஒரு சட்டகத்துக்குள் (ஃப்ரேம்) அடைக்கப்படுகிறது. இந்தச் சட்டகம் வெறும் ஒரு எல்லை மட்டுமே அல்ல, மாறாக, அது ஒரு கதைச்சொல்லியின் தேர்வு மற்றும் தத்துவார்த்தப் பார்வை. ஒரு ஒளிப்பதிவாளர், கேமரா லென்ஸுக்குள் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியைச் சட்டகமிடும் போது, அவர் வெளிச்சத்தை மட்டுமல்ல, அந்த வெளிக்குள் உள்ள உறவுகள், அதிகாரச் சமநிலை மற்றும் கதாபாத்திரங்களின் மனவெளி ஆகியவற்றை வடிவமைக்கிறார். இந்தக் காட்சி அமைப்பு (கம்போஷிஷன்) மற்றும் சட்டகமிடுதல் (ஃப்ரேமிங்) ஆகிய உத்திகளே சினிமாவின் விஷுவல் மொழியாக செயல்படுகின்றன.
கம்போஷிஷன்: சமநிலை, காட்சி வழிகாட்டல்: கம்போஷிஷன் (காட்சி அமைப்பு) என்பது ஒரு சட்டகத்துக்குள் உள்ள அனைத்துக் கூறுகளையும் (கதாபாத்திரங்கள் பொருட்கள், பின்னணி) கலைநயத்துடன் வைப்பது. இது பார்வையாளரின் கண்களைக் காட்சியின் மையத்தை நோக்கி இட்டுச் செல்லும் நுட்பமான வழிகாட்டுதல் ஆகும்.
ரூல் ஆஃப் தேர்ட்ஸ் (மூன்றில் ஒரு பங்கு விதி) - இது ஒரு காட்சியின் சட்டகத்தைக் கற்பனையான இரண்டு கிடைமட்டக் கோடுகளும், இரண்டு செங்குத்துக் கோடுகளும் என ஒன்பது சம பாகங்களாகப் பிரிக்கிறது. முக்கியமான பொருளை இந்தக் கோடுகள் சந்திக்கும் இடங்களில் வைப்பது, காட்சியின் சமநிலையைக் காப்பதுடன், பார்வையாளரின் கவனத்தையும் மையத்தை விட ஆழமான பகுதிகளில் நிலைநிறுத்துகிறது.
பல உலகத் திரைப்படங்களில் இந்த உத்தியானது ஓர் இயல்பான, அழகியல் சமநிலையை (ஏஸ்தடிக் பேலன்ஸ்) உருவாக்கப் பயன்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு விதி என்பது ஒளிப்படம் (ஃபோட்டோ) மற்றும் ஒளிப்பதிவின் அடிப்படை அமைப்புக் கொள்கையாகும்.
இதன் முக்கியத்துவம்:
1. சமநிலை: பொருள் மையத்தில் இல்லாமல் பக்கவாட்டில் இருப்பதால் காட்சி இயல்பாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருக்கும்.
2. அழகியல்: காட்சியில் ஓர் சமச்சீரான கலைமிகு உணர்வைத் தருகிறது.
3. கண் இயக்கம்: பார்வையாளரின் கண்கள் காட்சியில் இயல்பாகச் சுழல அனுமதிக்கிறது. உதாரணம் - ஒரு கதாபாத்திரத்தை கம்போஸ் செய்யும் போது அவரை மையத்தில் அல்லாமல் இடது அல்லது வலது என மூன்றில் ஏதேனும் ஒரு பகுதியில் வைப்பது.
சூரி நடித்த ‘கருடன்’ திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ.வில்சன், பல காட்சிகளில், மூன்றுகளின் விதியை சிறப்பாகப் பயன்படுத்தினார். கதாபாத்திரங்களை மையத்தில் அல்லாமல் பக்கவாட்டில் அமைத்ததன் மூலம் காட்சியில் ஒரு நேர்த்தியான சமநிலையை உருவாக்கினார். இதனால் பார்வையாளரின் கவனம் இயல்பாகக் காட்சியின் முக்கியப் பகுதிகளுக்குத் திசைத் திருப்பப்படுகிறது.
லீடிங் லைன்ஸ் (முன்னணி கோடுகள்) - சாலையில் செல்லும் தடங்கள், சுவர் விளிம்புகள், மரங்களின் வரிசைகள் அல்லது கட்டடங்களின் அமைப்பு போன்ற இயற்கையான அல்லது செயற்கையான காட்சி அமைப்புகளைக் கோடுகளாகப் பயன்படுத்தி, பார்வையாளரின் கண்களைக் காட்சியில் உள்ள முக்கிய மையப் பகுதியை நோக்கி இட்டுச் செல்லும் உத்தி, லீடிங் லைன்ஸ் எனப்படும். மாபெரும் இயக்குநர் அகிரா குரோசவா தனது ‘செவன் சாமுராய்’ போன்ற படங்களில், இந்த முன்னணிக் கோடுகளைப் பயன்படுத்தி காட்சியின் ஆழத்தையும் (டெப்த்), பயணத்தின் வேகத்தையும் (மொமெண்டம்) வெளிப்படுத்தினார்.
ஃப்ரேமிங் - வெளியின் உளவியல்: ஃப்ரேமிங் (சட்டகமிடுதல்) என்பது ஒரு கதாபாத்திரத்தை அல்லது பொருளைச் சுற்றியுள்ள வெளியை (நெகடிவ் ஸ்பேஸ்) எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் குறிக்கும் உளவியல் உத்தி.
க்ளோஸ்ட் ஃப்ரேம் (மூடிய சட்டகம்) - ஒரு கதாபாத்திரத்தை காரின் ஜன்னலுக்குள் வைத்தோ அல்லது சுவர்கள், தூண்கள், கூரைகள், கதவுகளின் சட்டகங்களுக்கு உள்ளோ அல்லது கூட்டத்தின் நடுவிலோ காட்சிப்படுத்துவதன் மூலம் ஓர் அடைபட்ட உணர்வை உருவாக்குவது. இந்தச் சட்டகம், கதாபாத்திரம் சிக்கலில் உள்ளது அல்லது அதன் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது போன்ற உணர்வை நேரடியாகக் கடத்தும்.
இயக்குநர் ஜி.அரவிந்தனின் ‘மதிலுகள்’ திரைப்படத்தில், கதாநாயகன் பஷீரைச் சுற்றியுள்ள உயரமான சிறை மதில்கள் மற்றும் மரச்சட்டகங்கள், அவரது தனிமையையும், சமூகத் தடைகளையும் அழுத்தமாக வெளிப்படுத்தின. இந்தச் சட்டகங்கள் கதைமாந்தரை நான்கு சுவர்களுக் குள் அடைத்து வைத்து, அவரது மனவெளியைக் குறுகியதாக்கின.
ஓபன் ஃப்ரேம் (திறந்த சட்டகம்) - கதாபாத்திரத்தைச் சுற்றிப் பரந்த வெளி இருப்பதைக் காட்டுவது ஓபன் ஃப்ரேம். இது அந்தக் கதாபாத்திரம் சுதந்திரமாக உள்ளது, சாகசத்துக்குத் தயாராகிறது அல்லது அதன் எதிர்காலம் நிச்சயமற்றது என்பதைக் குறிக்கும். விருதுகள் பல பெற்ற இங்கிலாந்து இயக்குநர் டேவிட் லீனின் ‘டாக்டர் ஜிவாகோ’ (1965) போன்ற காவியப் படைப்புகளில், பனி படர்ந்த ரஷ்யாவின் பரந்த நிலப்பரப்பில் ஓபன் ஃப்ரேமிங்கின் மூலம் கதாபாத்திரங்களை மிகச் சிறியவர்களாகக் காட்சிப்படுத்தினார். இவற்றின் மூலம் போர் மற்றும் காதல் வரலாற்றுப் பின்னணியில் மனிதனின் அற்பமான தன்மையையும், தனிமையையும் பிரம்மாண்டமான இச்சட்டகங்கள் உணர்த்தின.
சமச்சீர் சட்டகம்: சமச்சீர் (சிமெட்ரி) அமைப்பு என்பது, காட்சியில் உள்ள அனைத்துக் கூறுகளும் ஒரு மையக் கோட்டை ஒட்டிச் சமநிலையில் இருப்பது. சமச்சீர் சட்டகம் பெரும்பாலும் ஓர் உள்ளார்ந்த ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் குறிக்கிறது. இயக்குநர் வெஸ் ஆண்டர்சன் சமச்சீர் அமைப்பை டார்க் க்யூமர் மற்றும் குறியீட்டு உலகத்தை உருவாக்கப் பெரிதும் பயன்படுத்துகிறார்.
ஹிந்தி இயக்குநர் ரமேஷ் சிப்பியின் ‘ஷோலே’ (1975) திரைப்படத்தின் பல காட்சிகளில் பக்கவாட்டுச் சட்டகமிடுதல் (லேட்டரல் ஃப்ரேமிங்) பயன்படுத்தப்பட்டது. உதாரணத்துக்கு, ஜெயிலர் மற்றும் கதைமாந்தர்களின் உரையாடல்களின் போது, ஒரு கதாபாத்திரம் சட்டகத்தின் ஒரு மூலையில் மட்டுமே வைக்கப்பட்டு, மறுமூலை வெறுமையாக விடப்படும். இது கதாபாத்திரங்களுக்கு இடையேயான அதிகாரப் போராட்டத்தையும், சமநிலையற்ற உறவுகளையும் வெளிப்படுத்த உதவியது.
போலிஷ் மொழித் திரைப்படமான ‘ஐடா’ வில், பல காட்சிகளில் சட்டகத்தின் விளிம்பில் கதாபாத்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இது அவர்களுக்கான முடிவை வேறு யாரோ தீர்மானிக்கிறார்கள் என்ற உணர்வை பார்வையாளர்களுக்குக் கடத்தியது. காட்சி அமைப்பு மற்றும் சட்டகமிடுதல் என்பது வெறுமனே கேமராவை எங்கே வைக்கிறோம் என்பதல்ல; அது ஒரு காட்சியில் உணர்ச்சிபூர்வமான எடையை (எமோஷனல் வெயிட்) எப்படிக் கொடுக்கிறோம் என்பதாகும்.
க்ளோஸ்ட் ஃப்ரேம் அச்சத்தையும், ஓபன் ஃப்ரேம் சுதந்திரத்தையும் வெளிப்படுத்துகின்றன. ஒரு ஒளிப்பதிவாளர் கோடுகள், வடிவங்கள், மற்றும் வெளியைப் பயன்படுத்தி ஒரு கதையின் உணர்வை அமைதியாக, ஆனால் ஆழமாகப் பார்வையாளரின் மனதுக்குள் கடத்துகிறார். அதுவே சினிமாவின் உண்மையான விஷுவல் மொழி.
(புதன்தோறும் ஒளி காட்டுவோம்)
முந்தைய அத்தியாயம்: உணர்வுகளை மாற்றும் திசை | ஒளி என்பது வெளிச்சமல்ல 05