இயக்குநர் ஷங்கரின் ஒரு கருத்து தன்னை ஆழமாக பாதித்ததாக எடிட்டர் ரூபன் தெரிவித்துள்ளார். மும்பையில் பன்வெல் வளாகத்தில் நடந்த திரைப்பட விழா நிறைவுவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரூபன், மாணவர்களின் கேள்விகளுக்கு கலகலப்பாக பதிலளித்தார். ”நேர்மையாகச் சொன்னால் நான் எடிட்டராக ஆனது ஒரு விபத்தே” என்று தன் ஆரம்ப கால நாட்களை அவர் நினைவுகூர்ந்தார்.
”நான் பெரிய புத்திசாலி மாணவன் இல்லை. சோம்பேறியாக இருந்தேன்; தேர்வுக்கு முன் நண்பர்கள் சொல்வதையே நம்பியிருந்தேன்” என்று சிரித்துக்கொண்டு கூறினார். ஆனால் தனக்கு கவனிக்கும் திறன் அதிகம்; அதுதான் தனக்கு உதவியது என குறிப்பிட்டார். கல்லூரியில் இயக்குநராக வேண்டும் என்ற கனவில் இருந்தாலும், விதி அவருக்கு வேறு பாதையை காட்டியது.
”இரண்டாம் ஆண்டில், கவுதம் மேனன் இயக்கிய ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் இன்டர்ன்ஷிப் கிடைத்தது” என்று நினைவு கூர்ந்தார். “அப்போது பலருடன் பழகி, எனக்கு எடிட்டிங் மீது ஆர்வம் இருப்பதாகச் சொன்னேன். அந்தச் சிறிய உரையாடலே எனது வாழ்க்கையை மாற்றியது. அதன் பிறகு எடிட்டர் ஆண்டனி அவர்களிடம் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அவர் என் வழிகாட்டியாக ஆனார்” என்று குறிப்பிட்டார் ரூபன்.
இயக்குநர் ஷங்கரின் ஒரு கருத்து தன்னை ஆழமாகப் பாதித்ததாகவும் ரூபன் கூறினார். “ஷங்கர் சார் ஒருமுறை கூறியதைப் படித்தேன் – ஒரு சிறந்த இயக்குநராக வேண்டுமானால், முதலில் எடிட்டிங் அறையில் அதிக நேரம் செலவிட வேண்டும். அங்கேதான் கதை சொல்லலுக்கான உண்மையான சாரம்சத்தை புரிந்து கொள்ள முடியும். அதைத்தான் என் மனதில் பதித்துக் கொண்டேன். பத்து திரைப்படங்களை எடிட்டிங் செய்து அனுபவம் சேர்த்து, பிறகு இயக்குநராகி விடலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் சில ஹிட் படங்களுக்குப் பிறகு, எடிட்டிங் மீதான என் காதல் அதை விட ஆழமானது என்பதை உணர்ந்தேன்” என்று சிரித்தபடி குறிப்பிட்டார்.
மேலும் ரூபன் “இப்போது என் 85வது படத்தில் வேலை செய்கிறேன். ஆனாலும் இயக்குநராகும் கனவு இன்னும் உயிரோடு இருக்கிறது. சரியான கதை மற்றும் சரியான நேரத்திற்காக காத்திருக்கிறேன்” என்று கூறினார். ஏஐ தொழில்நுட்பம் மற்றும் எடிட்டிங் துறையில் நிகழும் மாற்றங்கள் குறித்த கேள்விக்கு ரூபன், “ஏஐ ஒரு உதவியாளர், எதிரி அல்ல. அது உதவலாம், ஆனால் கதை சொல்லும் கலை மனிதனுடையது” என்றார்