சேரன், நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம் நவீனத் தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்டு நவ.14-ம் தேதி வெளியாகிறது. படத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து பகிர்ந்து கொள்ளும் வகையில் படக்குழுவினர் ‘ஆட்டோகிராஃப் ரீயூனியன்’ எனும் பெயரில் பிரத்யேக நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
இதில் சினேகா, இயக்குநர்கள் ராமகிருஷ்ணன், பாண்டிராஜ், ஜெகன், பாடலாசிரியர் சினேகன், இசையமைப்பாளர் பரத்வாஜ், இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் கலந்து கொண்டனர். ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் சேரனுடன் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இயக்குநர் சேரன் பேசும்போது, “21 வருடங்களுக்குப் பிறகு ‘ஆட்டோகிராஃப்’ படம் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுக்கு சென்றடைவதற்காக நாங்கள் என்ன செய்திருக்கிறோம்? இன்றும் என்னுடைய படம் ஏதேனும் ஒரு இடத்தில் இந்த சமூகத்தில் யாரோ ஒருவரை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு கரை சேர்க்கிறது என்றால் அதைத்தான் என் வெற்றியாகப் பார்க்கிறேன். அப்படித்தான் என்னுடைய ஒவ்வொரு படத்தையும் உருவாக்கி இருக்கிறேன்.
இந்தப் படத்தைக் கூட அப்படித்தான் உருவாக்கினேன். எந்த தோல்வியாக இருந்தாலும் அதைக் கடந்து செல்லும் மனநிலை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது. இதில் காதல், ஒரு கருவி மட்டும் தான். நீ எங்கேயும் சோர்ந்து போய் விடாதே என்று சொல்வதுதான் இந்தப்படம். இந்தத் தலைமுறையினர் இந்தப் படத்தைப் பார்த்தால் அவர்களுக்கு வேறு யோசனை தோன்றலாம். நாம் விதைக்கத்தான் முடியும். அதற்கு இந்த படம் தகுதியானது என்பதால் மீண்டும் வெளியிடுகிறோம்.
இந்தப் படத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ற வகையில் கலர் கரெக் ஷன் முழுவதுமாக செய்து இருக்கிறேன். ரசிகர்களுக்கு சோர்வை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக டால்பி அட்மாஸ் போன்ற புதிய இசை நுட்பங்களை இணைத்து இருக்கிறோம்” என்றார்.