பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹ்யூகோவின் ‘லெஸ் மிஸரபிள்ஸ்’, 19-ம் நூற்றாண்டின் சிறந்த ஐரோப்பிய நாவல்களின் வரிசையில் ஒன்றாகப் பேசப்பட்டது. பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவல், பல மொழிகளில் திரைப்படமாகவும் சின்னத்திரை தொடராகவும் மேடை நாடகமாகவும் மாற்றம் பெற்றிருக்கிறது. இந்நாவலை சுத்தானந்த பாரதியார் தமிழில் மொழியாக்கம் செய்திருந்தார். அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படம், ‘ஏழை படும் பாடு’.
திருட்டு வழக்குக்காகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கந்தனை, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாவர் மீண்டும் கைது செய்கிறார். ஒரு கிறிஸ்தவ பேராயர் அவனுக்கு உதவுவதால், கந்தன் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுகிறது. அவன் ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்கிறான். தனது அடையாளத்தை மாற்றி உயரும் அவன், ஒருநாள் அந்நகரத்தின் மேயராகிறான். அவன் பழைய குற்றவாளி என்பதைத் தெரிந்து கொள்ளும் இன்ஸ்பெக்டர் ஜாவர், அவனை மிரட்டுகிறார். ஒரு கட்டத்தில் ஜாவரின் உயிரைக் காப்பாற்றுகிறான் கந்தன். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.
தமிழ் சினிமாவின் கிளாசிக் படங்களில் ஒன்றான இதில், கந்தனாக சித்தூர் வி.நாகையா நடித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாவராக சீதாராமன், கிறிஸ்தவ பேராயராக செருகளத்தூர் சாமா நடித்தனர். மேலும் வி.கோபாலகிருஷ்ணன், டி.எஸ்.பாலையா, டி.எஸ்.துரைராஜ், பத்மினி, லலிதா, என்னத்த கன்னையா, குமாரி என்.ராஜம் என பலர் நடித்த இப்படத்தின் மூலம் அடுத்தக் கட்டத்துக்கு உயர்ந்தார் நாகையா.
ஜாவராக நடித்த சீதாராமன், வழக்கறிஞராக இருந்து நடிகராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் மாறியவர். அவர் இதில் நடித்த ‘ஜாவர்’ கதாபாத்திரம் சிறப்பான வரவேற்பைப் பெற்றதால் அவர் பெயருக்கு முன் ‘ஜாவர்’ சேர்ந்து கொண்டது. தன் வாழ்நாள் முழுவதும் அவர் ‘ஜாவர்’ சீதாராமனாகவே அறியப்பட்டார்.
பஷிராஜா ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.எம்.ராமுலு நாயுடு தயாரித்த இப்படத்தை கே.ராம்நாத் இயக்கினார். இவர், மார்க்கண்டேயா (1935), கன்னியின் காதலி (1949), மர்மயோகி (1951), கதாநாயகி (1955) உள்பட பல படங்களை இயக்கியவர். சிறந்த ஒளிப்பதிவாளரும் கூட.
இப்படத்தின் தொடக்கத்தில் திருடன் கந்தனைத் திருத்தும் பேராயராக, பாடகர் நாகர்கோவில் கே. மகாதேவன் நடித்தார். சில காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு அவருக்குப் பதிலாக செருகளத்தூர் சாமாவை நடிக்க வைத்தார் தயாரிப்பாளர். இந்த மாற்றம் சரியானதாக அப்போது பேசப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் நட்சத்திர திரைக்கதை எழுத்தாளராக விளங்கிய இளங்கோவன், இப்படத்துக்கு திரைக்கதை, வசனத்தை எழுதினார். அவர் வசனங்கள் பேசப்பட்டன. எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்தார். படத்தில் எட்டு பாடல்கள்.
எம்.எல்.வசந்தகுமாரி பாடிய ‘யௌ வனமே ஆஹா யௌவனமே’, ‘கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்’, பி.ஏ. பெரியநாயகி பாடிய, ‘ஓ ஆசைக் கிளியே ஆசைக்கிளியே’, ராதா ஜெயலட்சுமி பாடிய ‘விதியின் விளைவால் அனாதை ஆனேன்’, நாகையா பாடிய ‘வாழ்வு மலர்ந்
ததுவே’ உள்பட அனைத்துப் பாடல்களும் ரசிக்கப்பட்டன.
இதில் ‘விதியின் விளைவால்...’ பாடலை இயக்குநர் ராம்நாத், ஒரே ஷாட்டில் எடுத்து வியக்க வைத்தார். அந்தக் காலகட்டத்தில் இந்த தொழில்நுட்ப அற்புதம் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இப்படத்துக்காக ஒரு கனவு பாடல் ஒன்றைப் படமாக்கத் திட்டமிட்டிருந்தனர். கோபாலகிருஷ்ணனும், பத்மினியும் நடிக்க வேண்டும். ஆனால், படப்பிடிப்பு அன்று, தனது மனைவிக்கு உடல் நிலை சரியில்லை என்று இயக்குநர் ராம்நாத் வரவில்லை. இதனால் செட்டில் இருந்து ஓட்டல் அறைக்குத் திரும்பிவிட்டார், நடிகர் கோபால கிருஷ்ணன்.
தயாரிப்பாளர் ராமுலு நாயுடு, அந்தக் காட்சியை தானே இயக்கப் போகிறேன் என்றும் உடனடியாக படப்பிடிப்புக்குத் திரும்புமாறும் சொன்னார், கோபாலகிருஷ்ணனிடம். ஆனால், அவர் வரமறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர், அவரை கோவையில் இருந்து சென்னைக்கு அனுப்பிவிட்டு, பாடல் காட்சியைப்படமாக்கினார். கோபாலகிருஷ்ணன் நடிக்க வேண்டிய பாடல் காட்சியில், திருவிதாங்கூர் சகோதரிகளில் ஒருவரான ராகிணிக்கு ஆண் வேடமிட்டு, பின்பக்கம் இருந்தும், லாங் மற்றும் மிட் ஷாட் காட்சிகளாகப் படமாக்கி முடித்தார் அப்பாடலை.
1950-ம் ஆண்டு இதே நாளில் (நவ.6) வெளியான இப்படம் மெகா வெற்றியைப் பெற்றது. தீபாவளிக்கு வெளியான ஏழை படும் பாடு, அப்போது ஆங்கிலப் படங்களை மட்டுமே திரையிடப்பட்டு வந்த சென்னை ‘கேசினோ’ திரையரங்கில் வெளியான முதல் தமிழ்ப் படம் என்ற சிறப்பைப் பெற்றது. ‘லெஸ் மிஸரபிள்ஸ்’ படத்தின் பாதிப்பில் 1972-ம் ஆண்டு ‘ஞான ஒளி’ என்ற படம் வெளியானது. சிவாஜி கணேசன் நடித்த இப்படத்தை பி.மாதவன் இயக்கினார்.