கிஷன் தாஸ், ஷிவாத்மிகா, விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘ஆரோமலே’. கவுதம் வாசுதேவ் மேனனிடன் உதவி இயக்குநராக பணியாற்றிய சாரங் தியாகு இயக்கியுள்ள இப்படத்துக்கு சித்துகுமார் இசை அமைத்துள்ளார். நவ.7-ம் தேதி வெளியாகும் இப்படம் பற்றி சாரங் தியாகு கூறியதாவது: இது ரொமான்டிக் படம்தான். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் வரும் பாடல் வரியில் இருந்து ஒரு வார்த்தையை எடுத்து தலைப்பாக வைத்துள்ளேன். ஒரு பள்ளி மாணவன் இளைஞனாவது வரை அவன் வாழ்வில் நடக்கும் காதல் சம்பவம்தான் கதை.
படத்தில் நடிப்பதற்கு அனைவரையும் ஆடிஷன் நடத்தித் தேர்வு செய்தோம். ஆனால், ஹீரோவாக கிஷன் தாஸை மனதில் வைத்தே கதையை எழுதினேன். படத்தில் அவர், சினிமா வசனங்களைப் பேசி காதலிக்க முயற்சிப்பார். நாயகி ஷிவாத்மிகாவுக்கு பொறுப்பான ஒருவரைக் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம்.
இவர்கள் இருவருக்கும் வரும் காதலும் அதைத் தொடர்ந்து நடக்கும் பிரச்சினைகளும்தான் கதை. இன்றைய கால கட்ட இளைஞர்களின் காதல் கதையாக இது இருக்கும். படம் முடிந்ததும் நடிகர் சிம்பு பார்த்தார். அவர் சில மாற்றங்களைச் சொல்லி, அதைச் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்றார். அதை ஏற்றுக் கொண்டு அவர் சொன்ன மாற்றங்களை மீண்டும் ஷூட் செய்து சேர்த்தோம். கண்டிப்பாக இந்தப் படம் ரசிகர்களுக்குப் பிடிக்கும். இவ்வாறு சாரங் தியாகு கூறினார்.