தமிழ் சினிமா

திரை விமர்சனம்: கஜினிகாந்த்

செய்திப்பிரிவு

ஆர்யாவின் அப்பா ‘ஆடுகளம்’ நரேன் தீவிர ரஜினி ரசிகர். நிறைமாதமாக இருக்கும் தன் மனைவியை, ரஜினியின் ‘தர்மத்தின் தலைவன்’ படத்துக்கு அழைத்துச் செல்கிறார். திரையரங்கிலேயே குழந்தை (ஆர்யா) பிறக்கிறது. ‘தலைவர்’ மீதான பாசத்தால், மகனுக்கு 'ரஜினிகாந்த்' என நாமகரணம் சூட்டி மகிழ்கிறார் நரேன். பிரசவ காலத்தில் ‘ஞாபக மறதி’ ரஜினியை லயித்துப் பார்த்ததாலோ என்னவோ, வளர வளர ஆர்யாவையும் ஞாபக மறதி தொற்றிக் கொள்கிறது. இதனால், அவருக்கு

திருமண வாய்ப்பு தொடர்ந்து தட்டிப்போகிறது. ‘இந்த ஜென்மத்தில் உனக்கு கல்யாணம் ஆகாது’ என்று அப்பா வெறுத்துப்போய் கூறுகிறார். அந்த தருணத்தில் நாயகி சாயிஷா சைகலின் கடைக்கண் பார்வை, ஆர்யா மீது விழுகிறது. தனது மறதி நோயை காதலியிடம் காட்டாமல் மறைத்து, நண்பர்கள் சதீஷ், கருணாகரன் உதவியோடு சமாளித்து, சாயிஷாவின் இதயத்தில் இடம்பிடிக்கிறார் ஆர்யா. இந்த சூழலில், நாயகியின் தந்தை சம்பத்துக்கு ஆர்யா ஒரு ‘கஜினி’காந்த் என்று தெரியவர, அவரை வெறுக்கிறார். இதற்கிடையில், முரட்டு காவல் அதிகாரியான அஜய்யின் ஒருதலைக் காதல் வேறு. இந்த தடைகளைத் தாண்டி காதலி சாயிஷாவை ஆர்யா கைப்பிடித்தாரா, இல்லையா என்பதே கஜினிகாந்தின் கதை.

'ஹர ஹர மகாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயகுமாரின் அடுத்த படம்.

முதல் 2 படங்களுடன் ஒப்பிடும்போது, இதை அனைத்து வயதினருக்குமான படமாக தந்திருப்பது பெரிய ஆறுதல். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ போல ஒரு லைட் வெயிட் காமெடி படத்தில் ரசிகர்களை லயிக்க வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி ஆர்யாவுடன் களம் இறங்கியுள்ளார். இதற்காக, தெலுங்கில் ஏற்கெனவே வந்த 'பலே பலே மகாடிவோய்' படத்தை ரீமேக் செய்திருக்கிறார். ஆனால், வலுவான திரைக்கதையோ, காட்சி அமைப்போ இல்லை. மேலோட்டமான கதை நகர்வு, அர்த்தமற்ற காமெடி என படம் சலிப்பாக நகர்கிறது.

மறதி இளைஞன் மற்றும் காதலிக்காக உருகும் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார் ஆர்யா. அவரது நண்பர்களாக வரும் கருணாகரன், சதீஷ் ஆகிய இரு நகைச்சுவை நடிகர்களையும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டதால், 2-வது பாதி படம் தப்பித்துவிடுகிறது.

நாயகி சாயிஷா நன்றாக நடனம் ஆடுகிறார். காதல் காட்சிகளில் உருகுகிறார். நடிப்பிலும் நன்றாகவே தேறியிருக்கிறார். அப்பா கேரக்டரில் நரேன், சம்பத்தும் அருமையாக ஸ்கோர் செய்கின்றனர்.

படத்தில் வேளாண் விஞ்ஞானியாக வருகிறார் ஆர்யா. கடந்த நிமிட நிகழ்வுகூட மறந்துபோகும் ஒருவர் எப்படி விஞ்ஞானி ஆனார்? நாயகன் சொல்வதை அப்படியே நம்பும் அப்பிராணியாக நாயகி சாயிஷா ஏன் இருக்கிறார்? என்பது தெரியவில்லை. கதாநாயகனின் மறதியே கதையின் முக்கியப் பிரச்சினை. ஆனால், அதை மையமாகக் கொண்ட நகைச்சுவைகள் அவ்வளவாக இல்லை.

காவல் அதிகாரி அஜய் கதாபாத்திரத்தில் எந்த புதுமையும் இல்லை. மொட்டை ராஜேந்திரனின் காமெடி டிராக் படத்துடன் ஒட்டவில்லை. பல்லுவின் ஒளிப்பதிவும் பாலமுரளிபாலுவின் இசையும் படத்துக்கு பலம். இருந்தாலும், நல்ல ஒருவரிக் கதைக்கு போதுமான சுவாரசியம் காட்சிகளில் சேர்க்கப்பட்டிருந்தால், நினைவு

களில் இன்னும் சிலகாலம் தங்கியிருப்பான் ‘கஜினிகாந்த்’.

SCROLL FOR NEXT