எழுத்தாளர் பூமணியின் நாவலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம்,‘கசிவு’. எம்.எஸ்.பாஸ்கர் கதையின் நாயகனாக நடித்துள்ள இதில், விஜயலட்சுமி, ஹலோ கந்தசாமி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரதன் செண்பகவல்லி இயக்கியுள்ள இப்படத்தை வெற்றிச்செல்வன் தயாரித்துள்ளார்.
ஓடிடி பிளஸ் தளத்தில் வெளியாகியுள்ள இப்படம் பற்றி இயக்குநர் வரதன் செண்பகவல்லி கூறியதாவது: நான் கமர்ஷியல் கதையை இயக்கலாம் என்று அதற்கான முயற்சியில் இருந்தபோது, எழுத்தாளர் பூமணியைச் சந்தித்தேன். அவர் என்னிடம் 3 சிறுகதைகளைக் கொடுத்தார். அதை ஆந்தாலஜி படமாக இயக்கலாம் என்று சொன்னார். அது சரி வராத தால் அந்த மூன்றிலிருந்து ‘கசிவு’ நாவலைத் தேர்ந்தெடுத்து, அதை மட்டும் திரைப்படமாக இயக்க முடிவு செய்தோம். அப்படித்தான் இப்படம் உருவானது. இந்தக் கதையில் வரும் பொன்னாண்டி கதாபாத்திரத்துக்கு நான் எம்.எஸ்.பாஸ்கரைத்தான் யோசித்தேன். அவரையேதான் பூமணியும் யோசித்து வைத்திருந்தார்.
இந்தப் படத்தை ஏழு நாளில் எடுத்து முடித்தோம். நாவலைப் படம் பண்ணும்போது கதையில் சின்ன சின்ன மாற்றங்கள் தேவை. அதை செய்தோம். அடுத்தும் பூமணியின் சிறுகதையை இயக்க இருக்கிறேன். இது பீரியட் கதை. அழுத்தமான கதையாகவும் சொல்லப்பட வேண்டிய கதையாகவும் இருக்கும்” என்றார்.